வடக்கு மாகாண சபையின் 18 ஆவது அமர்வு நேற்று -வடமாகாண சபையில் 7 பிரேரணைகள் நிறைவேற்றம்!

423

வடக்கு மாகாண சபையில் 7 பிரேரணைகள் நிறைவேறற்றப்பட்டதுடன் ஒரு பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 18 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது அவைத்தலைவரினால் 3 பிரேரணைகளும், உறுப்பினர் பரஞ்சசோதி 2 பிரேரணை , உறுப்பினர் சயந்தன், உறுப்பினர் ரவிகரன் தலா ஒரு பிரேரணையும் சபையின் முன் வைத்து தீமானமாக நிறைவேற்றப்பட்டது.

10797953423_9766e36d46

எனினும் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டு வந்த தீர்மானம் அடுத்த அமர்வில் எடுத்துக் கொள்ளப்படுவதாக முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவையில் அவைத்தலைவர் அறிவித்திருந்தார்.

அந்தவகையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

கூட்டுறவு சங்கங்களின் உப விதிகள் அவற்றின் தலைவர், இயக்குனர் சபை உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இரண்டு தடவைக்கு மேலாக பதவி வகிக்க முடியாது என வரையறை செய்துள்ள போதும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் உபவிதிகளில் அவ்வாறான மட்டுப்பாடு இல்லாமையினால் பலர் தொடர்ந்தும் பதவி வகிப்பதும் அதனால் ஏக போகமும் தனிமனித ஆதிக்கமும் முறைகேடுகளும் இடம் பெற வாய்ப்புள்ளது.

எனினும் மாற்றங்களுக்கான வாய்ப்புக்கள் இல்லாமையும் அவதானிக்கப்பட்டுள்ளமையால் சகல வகையான கூ.ச உப விதிகளில் எந்தவொரு சங்கத்தின் தலைவரோ இயக்குநர் சபை உறுப்பினரோ தொடர்ச்சியாக இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிப்பது மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன் இதற்கான நடவடிக்கையினை வடக்கு மாகாண சபையின் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்க பதிவாளரும் மேற்கொள்ள வேண்டும் என இச்சபை தீர்மானிக்கின்றது என்று அவைத்தலைவர் சபையில் தீர்மானத்தை முன் மொழிந்தார். விவாதங்களுக்குப் பின்னர் தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அடுத்து வடக்கிற்கு வந்த ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்து யுத்தத்தில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட நகைகளை கொண்டு சென்றது போன்று 1995, 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிகழ்ந்த இடப்பெயர்வு காரணமாக யாழ்.மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் வங்கிகளால் கொழும்புக்கு பாதுகாப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு மீள் வழங்கப்படாதுள்ள அடைவு நகைகளையும் உரிமையாளர்களுக்கு மீள வழங்க வேண்டும்.

அத்துடன் காலாவதியான கணக்குகள் எனக் கூறி முடக்கப்பட்ட கணக்குகளின் மிகுதியை அந்தந்த வாடிக்கையாளர்களுக்கே வழங்க வேண்டும்.

இதற்கான பகிரங்க அறிவித்தலை வழங்க வேண்டும் என்றும் வாடிக்கையாளருக்கு மீளளிக்க முடியாத மொத்த தொகையை யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு என வடக்கு மாகாண சபைக்கு அரசு வழங்க வேண்டும் என்ற பிரேரணையினையும் அவைத்தலைவர் கொண்டு வந்திருந்தார்.

குறித்த பிரேரணையும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அதுபோல அவைத்தலைவரின் 3ஆவது பிரேரணையாக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றன.

எனவே அவர்களுக்குரிய வழித்தட அனுமதி கட்டணத்தில் இருந்து விலக்கழித்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று மத்திய போக்குவரத்து அமைச்ச மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவையும் இச்சபை கோருகின்றது என்று அமைந்தது. குறித்த பிரேரணையும் ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்தும் சபையில் 1984 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் இடப்பெயர்வுக்குப் பின்னர் கொக்கிளாய் பகுதிகளில் கரைவலைப்பாடுகளில் சிங்களவர்கள் தொழில் செய்து வருகின்றனர் . அவர்களுக்கு கரைவலைப்பாட்டு அனுமதியும் வழங்கப்பட்டு விட்டது.

எனினும் முள்ளிவாய்க்காலில் கரை வலைப்பாடுகள் செய்து வருபவர்களுக்கு இன்று வரை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் பகுதி மக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சினை கோருவதாக உறுப்பினர் ரவிகரனால் பிரேரணை கொண்டுவரப்பட்டு விவாதம் இன்றி ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

உறுப்பினர் பரஞ்சோதி, கூட்டுறவு திணைக்களத்தில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவை 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கூட்டுறவு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சாதாரண நடைமுறையின் ஊடாக பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை.

அதற்கமைய தரம் 01 இல் 9 வெற்றிடம் காணப்படுகின்றது. அதனை நிரப்ப வேண்டும் என்ற பிரேரணையினை முன்வைத்தார். குறித்த பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்தும் உறுப்பினர் பரஞ்சோதி, முன்பள்ளிகள் தற்போது கல்வித் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும் தற்போது இருக்கும் ஆசிரியர்கள் பலர் அதற்குரிய கல்வித் தகைமை இல்லாதவர்கள் என அறிய முடிகின்றது.

எனினும் குறைந்த சம்பளம் பெறும் இவர்கள் அதிக பணம் கொடுத்து பயிற்சி பெறுவது என்பது கடினமானது எனவே பயிற்சி வழங்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது 2ஆவது பிரேரணையினை முன்வைத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் தமிழர்களது வரலாற்று சின்னமாக விளங்கும் மந்திரி மனைக்கு தற்போது பலர் உரிமை கொண்டாடி வருகின்றனர் என்றும் மாதாந்தம் 4 ஆயிரம் ரூபாவிற்கு குத்தகைக்கு மந்திரி மனை வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டது என்றும் தற்போது குறித்த கட்டடம் அழியும் நிலையில் உள்ளதாகவும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையினை சபையில் முன் வைத்தார்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் சரியான தரவுகள் வேண்டும் என்றும் அவற்றைத் தேடிப்பார்த்த பின்னரே பேசி முடிவு எடுக்கலாம் என்றும் முதலமைச்சர் சபையில் தெரிவித்ததையடுத்து குறித்த பிரேரணை அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

SHARE