ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தாம் வெற்றிபெற்றால் தேசிய அரசு அமைக்கப்படுமென ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைத்திரிகால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளபோதிலும் அது குறித்து எத்தகைய கருத்தும் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.
ஆனால் அது போன்ற எத்தகைய அழைப்புக்கள் வந்தாலும் அவை குறித்தெல்லாம் நாம் பரிசீலிப்போம்.
மைத்திரிபால சிறிசேனாவின் தலைமை மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை முன்வைத்து தமது முடிவைத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் உறுதியாகவும் கூறியிருக்கின்றார்கள்.
நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் – நியாயமான தடத்தில் – பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள்.
நாட்டு மக்கள் அனைவரும் சமாதானமாகவும், சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு உகந்த சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பை அவர்கள் அப்பட்டமாக முன்வைத்திருக்கின்றார்கள்.
தமிழ் மக்களும் தமிழ்ப்பேசும் மக்களும் – குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் – தங்களுக்கு நீதியும் நியாயமும் கிட்டும் என்று நம்பி இந்தத் தீர்ப்பை அளித்திருக்கின்றார்கள்.
அதனையே ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தல் வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்தத் தேர்தல் ஜனநாயக மாண்புகளுக்கு, மக்களின் இறைமைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. அந்த ஜனநாயக மாண்பின் வெற்றியில் தங்களுக்கு உள்ள உரிமை- அந்த இறைமையில் தமக்கு உள்ள நியாயமான உரித்து, உரிய முறையில் தங்களுக்கும் பகிரப்படும் என தமிழ் மக்கள் நம்புகின்றார்கள் எதிர்பார்கின்றார்கள் என்றார்.