வன்னி மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரர்களில் ஒருவரான மௌலவி என்.கே.எஸ்.முனாஜித் சீலானி அவர்களிடம் தினப்புயல் முகாமையாளர் மன்னிப்புக் கடிதம் கையளிப்பு

806

கடந்த 16.03.2014 அன்றைய தினப்புயலின் ஆன்மீக உலகம் என்கின்ற பகுதியில் முகம்மது நபி ஒரு பாவி என்றும், முகம்மது நபி யுத்தத்திற்கு தீர்க்கத்தரிசியாக இருந்தார் என்று ஆரம்பித்து முகம்மது கல்லறை மூடியிருக்கின்றது ஏனென்னால் முகம்மது நபி இறந்துவிட்டார். இயேசு நாதரின் கல்லறை திறந்திருக்கிறது ஏனென்றால் அவர் மறித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இவ்வாறு அந்த வாசகங்கள் முடிவடைகின்றன. வேத ஆதாரத்தை மட்டும் காட்டி முகம்மது நபி அவர்களை தரக்குறைவாக செய்தி வெளியிட்டமைக்கு தினப்புயலின் முகாமையாளர் ச.பிரகாஷ் மௌலவி என்.கே.எஸ் முனாஜித் (சீலானி) அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரும் கடிதத்தை தினப்பயுல் பத்திரிகை அலுவலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் பத்திரிகை முகாமையாளர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 2 வருடங்களாக தினப்புயல் பத்திரிகை நடுநிலைமை வகித்துவருகின்றது. மத ரீதியான செய்திகளுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுயாதீனமாக அவரவர் மதங்கள் தொடர்பில் சிறந்த கருத்துக்களை வழங்க முடியும். அதற்காகவே இப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பத்திரிகையின் ஆரம்ப காலம் தொடக்கம் இக்காலம் வரையிலும் எந்தவொரு மதங்களைப்பற்றிய தவறான கருத்துக்கள் இடம்பெறவில்லை. இச்சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு சம்பவமாகும். இது இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட செய்தியாகும். இதனுடைய முழுமையான கருத்துக்களை உற்றுநோக்காது எமது பத்திரிகை பிரசுரித்ததன் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தினரிடமும், மௌலவிகளிடமும், ஹாஜ்யார்களிடமும் பகிரங்க மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றோம்.

33333

மேலும் இது தொடர்பில், எமது பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்து (08.04.2014) காலை 10.30 மணியளவில் மௌலவி எம்.கே.எஸ் முனாஜித் (சீலானி) இதுதொடர்பில் முகாமையாளருடன் கருத்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பணிப்பாளரின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் மௌலவி தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு, அண்மையில் தினப்புயல் பத்திரிகையிலே முகம்மது நபி ஸல்லல்லாகுஅலைகுவஸ்ஸல்லம் தொடர்பாக உண்மையற்ற கருத்துக்கள் இப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதாக நாம் அறிந்தோம். இந்த செய்திகள் திட்டமிடப்பட்ட அல்லது சுயநினைவோடு எழுதப்பட்ட செய்தி அல்ல. தற்செயலாக அது பிரசுரிக்கப்பட்ட செய்தியாகும் என்பதை நாம் உணர்ந்துகொண்டோம்.

தினப்புயல் பத்திரிகையின் பணிப்பாளரை சந்தித்தோம். அவர் கூறியதாவது, அது தற்செயலாக நடந்ததொன்று. அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று அவர் கூறியதையடுத்து, இவ்விடயம் வெறுமனே வாசகப் பிழை என்றும், இது தற்செயலாகவே பிரசுரிக்கப்பட்டதொன்று. இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதல்ல என மீண்டும் மீண்டும் வலியுறுத்திச்சொல்கின்றோம். அவர்கள் உடனடியாக பத்திரிகைத் தர்மத்திற்கேற்ற வகையில் பத்திரிகையின் பணிப்பாளர், ஆசிரியர் என்ற வகையில் அதனை உணர்ந்து உடனடியாக எங்கிருந்தெல்லாம் எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதோ அவர்களிடத்தில் எல்லாம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். நேரடியாக அவருடன் உரையாடிய வகையில் அந்த நிலைமைகளை நாங்கள் உணர்ந்துகொண்டதுடன், இதற்கான மாற்று நடவடிக்கைகளை எங்களுடைய சமுதாயத்தினர் எடுக்கவேண்டிய தேவை இல்லை. தற்செயலாக நடந்ததென்று அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். இதற்கு முன்னர் எல்லாம் இப்பத்திரிகை தவறான விடயங்களை பிரசுரிக்கவில்லை என்பதும் உண்மை. மூன்று மதத்திற்கும் சமமான பங்கினை வழங்கியுள்ளார்கள். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்பதை ஒத்துக்கொண்டதன் காரணத்தினால், முகம்மது நபி ஸல்லல்லாகுஅலைகுவஸ்ஸல்லம் அவர்களுடைய வாழ்வியலை பின்பற்றக்கூடிய மக்கள் என்றவகையில், இவ்விடயத்தை உணர்ந்து அவர்களுக்கெதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்க வேண்டாம் என்று வவுனியா மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரர்களில் ஒருவராக இருக்கக்கூடிய என்.கே.எஸ் முனாஜித் (சீலானி) ஆகிய நான் எம் சமுதாயத்தினரிடத்திலே மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

தினப்புயல் நிர்வாகம்

 

SHARE