2013ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கூட்டமைப்பின் தலைமையின் எதிர்பார்ப்பினை மெய்ப்பிக்கும் வகையில், மக்கள் தாம் தமது பங்களிப்பினை முழுமையாக வழங்கியுள்ளதாக உரிமையுடன் தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட மக்கள்,
இந்தப்பெரு வெற்றியின் பயனாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை, சுழற்சி முறையில் வழங்குவதாக தமக்கு அளித்த வாக்குறுதியை த.தே.கூட்டமைப்பு நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை.சேனாதிராசாவிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
நேற்று 21.12.2014 அன்று வவுனியாவில் வைத்து மாவை எம்.பியிடம் கையளிக்கப்பட்டுள்ள அந்த மகஜரில்,
வடமாகாணசபை தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் ஐவருக்கு தலா ஒவ்வொரு வருடம் எனப்பகிர்ந்தளிப்பதாக தமக்கு வாக்குறுதி வழங்கப்பட்டதாகவும்,
அதன்படி முதலாம் வருடம் திருமதி மேரிகமலா குணசீலன் அவர்களுக்கு வழங்கப்பட்டு அவருடைய பதவிக்காலம் குறித்த ஒரு வருடம் முடிவடைந்து மேலதிகமாக மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இரண்டாம் வருடத்துக்குரியவருக்கு அப்பதவி மாற்றி வழங்கப்படவில்லை என்றும்,
எனவே எஞ்சியுள்ள காலத்தை உறுதிமொழி வழங்கியமைக்கு ஏற்றவாறு ஏனையோருக்கும் பகிர்ந்தளித்து, மக்கள் சேவைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.