வவுனியாவில் போலி வைத்தியர்கள் அவதானமாக இருக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

218

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் போலி வைத்தியர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொது மக்கள் வழங்கிய தகவல்களையடுத்து வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போலி வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கு தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் எம்.எம்.எம். அனஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் சுகாதார தரத்தினை முன்னேற்றுவதற்கு தமது சங்கத்திலுள்ள அனைத்த உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், அண்மைக்காலங்களில் போலி வைத்தியர்களின் செயற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் சில அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பொது மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இப்போலி வைத்தியர்களை இனங்கண்டுள்ளதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஆயுள்வேத வைத்தியர்கள் சிலர் நுண்ணுயிர் கொல்லி வில்லைகளை பொது மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் இச் செயற்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு ஆயுள்வேத வைத்தியர்கள் நுண்ணுயிர் கொல்லி வில்லைகளை வழங்குவதையோ, ஊசி மூலமான மருந்துகளையோ பயன்படுத்த முடியாது.

குறைந்த பட்சம் வில்லைகளை நோயாளிக்கு வழங்கும்போது அளவுகள், அதன் தன்மை, செயற்பாடுகள் பற்றி தெரிந்திருக்கவேண்டும். அத்துடன் ஆயுர்வேத வைத்தியர்களின் காட்சிப்படுத்தல் விளம்பரப்பலகையில் தமது படிப்பு, பட்டம் முற்றிலும் மாறுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்கை நெறியினைப் பயின்று இலங்கை மருத்துவச்சபையில் பதிவு செய்யப்படாமல் சிகிச்சையளிப்போர் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் இவ்வாறு செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தயாராகி வருவதாகவும் இவ்வியத்தில் பொதுமக்கள் போலி வைத்தியர்களை இனங்கண்டு செயற்படுமாறும் அவற்றினால் ஏற்படும் விபரீதங்களிலிருந்து விலகி இருக்குமாறும் வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE