வவுனியா – செட்டிகுளம் பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், அழகாபுரி கிராமத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செட்டிகுளம், அழகாபுரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் குடும்பத்தினர் சிறுவன் ஒருவனை வீட்டில் நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளனர்.
இதன்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதையடுத்து சிறுவன் கூச்சலிட்டதுடன் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வீடு முழுமையாக எரிந்து நாசமாகிய நிலையிலேயே தீ பரம்பல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்கு மின்னொழுக்கே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.