வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் ஓட்டோவும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து- ஓட்டோவில் பயணித்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான்

353

 

வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் ஓட்டோவும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். அவனது தாய், தந்தை, சகோதரியான சிறுமி ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரக பிக்கப் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற மாட்டை மோதி அதன்பின்னர் எதிரே வந்த ஓட்டோவையும் மோதித்தள்ளியது.

91

இதனால் ஓட்டோ வீதியோரத்திலிருந்த கிடங்கில் தூக்கி வீசப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்ததுடன், ஏனையவர்கள் கடுகாயமடைந்தனர். வவுனியா, கூமாங்குழத்தைச் சோந்த சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையான சிவகுமார் பிரவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் தாய் சிவகுமார் தவமலர் (வயது 30), தந்தை சுப்பையா சிவகுமார் (வயது 34) மற்றும் சகோதரி சிவகுமார் துவாராகா (வயது 5) ஆகியோர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர். பிக்கப் வாகனத்தைச் செலுத்திவந்தவர் மதுபோதையில் காணப்பட்டார் என்றும், அவரை பொலிஸார் பிறிதொரு வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர் என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

SHARE