வவுனியா பாரதிபுரம் மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று இராணுவத்தினரின் துணையுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேற்கொண்ட மிரட்டல் சம்பவங்களை மூடி மறைப்பதற்காக அமைச்சரின் கையாட்கள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து அந்தக் கிராமக்கள் நடந்த சம்பவங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ரிசாத், பாகிஸ்தான் நாட்டவர்களுடன் பாரதிபுரம் கிராமத்துக்குச் சென்றதுடன் அங்குள்ள மக்களை வெளியேறுமாறு மிரட்டிச் சென்றிருந்தார்.
இந்தச் சம்பவத்தினை அடுத்து அங்கு சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்கள் தியாகராஜா, இந்திரராஜா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பாபு, தருமலிங்கம், சிவாஸ்கரன் ஆகியோர் அங்கு நடைபெற்ற கெடுபிடிகள் தொடர்பிலான சம்பவங்களை வெளிக்கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் திரிவுபடுத்தப்பட்டதாகவும் அமைச்சருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட செயலம் என்றும் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா உட்பட்ட அமைச்சர் றிசாட்டின் கையாட்கள் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் 62 பேர் தாம் குறித்த கிராமத்தில் வாழ்ந்த வரலாற்றினைக் குறிப்பிட்டு தமது குடியிருப்புக்கு நிரந்தர உறுதிப்பத்திரம் வழங்கி உதவுமாறு சமூக பிரதிநிதிகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி அதில் அனைவரும் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.