வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர்
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம்
தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிக்கு
மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகள் இடம்பெற்றது.
இதன்போது பாண்ட் வாத்திய அணிவகுப்பு பயிற்சியும் இடம்பெற்றுள்ளது. பாண்ட் வாத்திய
அதிர்வால் பாடசாலை மைதானத்தின் அருகில் உள்ள கட்டடத்தின் கூரையில் இருந்த குளவிகள் பறந்து
வந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் தாக்கியுள்ளன. இதன் காரணமாக நான்கு ஆசிரியர்களும்
மூன்று மாணவர்களும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த மாகாணசபை தேர்தலின் போது இப் பாடசாலையில் தேர்தல் கடமைக்காக வந்த
உத்தியோகத்தர் ஒருவர் குளவி கொட்டியதில் மரணமடைந்ததாகவும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி
தேர்தலின் போதும் இப் பாடசாலையில் குளவி கூடு ஒன்று அகற்றப்பட்டதாகவும்
இப்பாடசாலையின் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.