வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்-எல்லைக் கிராமங்களில் சிங்களவர்களை குடியேற்றவே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு சிங்கள அரச அதிபர்கள்

329

 

வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 10.06.2015 ஆம் திகதி வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தினால் ஒப்பமிடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு – வவுனியா மாவட்ட அரச அதிபரை அந்த மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யுமாறு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு தங்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதியை 17.03.2015ஆம் திகதிய வடக்கு மாகாண சபையின் அமர்வின்போது சமர்ப்பித்து, வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்வதற்கு இந்தச் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முன்மொழிவு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொருத்தமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சகல உறுப்பினர்களும் 09.06.2015ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் அமர்வு ஆரம்பித்தவுடன் சபா மண்டபத்தில் நடுவே எமக்கு முன்பாக நின்று தமது ஆட்சேபத்தை வெளிப்படுத்தினர்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனும் தொடர்பு கொண்டு பொருத்தமன நடவடிக்கை எம்மால் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தத்தமது ஆசனங்களுக்குத் திரும்பினர். ஜனாதிபதி அவர்களே, இது முழுமையான சிறப்புரிமை மீறல் மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அவமதித்த செயல் சம்பந்தப்பட்டதாகும்.

இதில் இனரீதியான கோணம் எதுவுமில்லை. ஏனெனில் ஆட்சேபனை தெரிவித்தவர்கள் யாவரும் தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களைச் சேர்ந்தவர்கள். ஆகையால் வவுனியா மாவட்ட அரச அதிபரை மிக விரைவில் அந்த மாவட்டத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யுமாறு விநயமாக வேண்டுகிறோம் – என்றுள்ளது. இந்தக் கடிதத்தின் பிரதிகள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய திருமதி சார்ள்ஸ், மட்டக்களப்பிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதனை தொடர்ந்து,

1977ஆ ம் ஆண்டு தொடக்கம் 1981 ம் ஆண்டு வரை இறுதியாக முதன்னநாயக்க என்ற சிங்களவர், வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய பின்னர், தற்போது மீண்டும் சிங்கள நிர்வாக அதிகாரியொருவர் வவுனியாவில் அரச அதிபராக கடமையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கத விடயம்.

தமிழ் மொழி பேச முடியாத ஒரு அரச அதிபரால் எவ்வாறு சாதாரண மக்களுடன் உரையாட முடியுமென பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். சிங்கள அரசு திட்டமிட்ட வகையிலேயே வடக்கிலே சிங்கள நிர்வாக அதிகாரிகளை நியமிக்கின்றதென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தமிழர்களின் எதிர்ப்பின் மத்தியில் மன்னாரில் சிங்களவர் அரச அதிபராக கடமையாற்றும் அதே வேளை சிங்கள குடியேற்றங்களை நிறுவியும் வருகிறார்.

எல்லைக் கிராமங்களில் சிங்களவர்களை குடியேற்றவே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு சிங்கள அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்து முல்லைத்தீவ மாவட்டத்திற்கு சிங்கள அரச அதிபரை நியமிக்க அரச நடவடிக்கையில் இறங்கலாமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE