வாக்கு மூலமொன்றை ஏன் மஹிந்தவிற்கு அளிக்க முடியாது – லக்ஸ்மன் கிரியல்ல

282

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏன் வாக்குமூலமொன்றை அளிக்க முடியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி நியமனங்களின் போது பணக் கொடுக்கல் வாங்கல்கள் மேற் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் உண்மை தெரிவுப்படுத்தப்பட்ட தகவல்களை, சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் அல்ல எனவும் அவர் தொடர்பில் சிறப்புரிமை கேள்விகளை எழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தின் போதே அவ்வாறான சிறப்புரிமை கேள்விகளை எழுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 79 சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பணம், பதவிகள், அன்பளிப்புகள், வரப்பிரசாதங்கள், நன்கொடைகள் போன்றவற்றை ஒரு வேட்பாளருக்கு சாதகமான நிலமை ஏற்படும் வகையில் வழங்கினால் அது சட்ட மீறலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே திஸ்ஸ அத்தநாயக்க சுகாதார அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பிரதமர் போன்ற எவரும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தைரியமாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்கு மூலமொன்றை அளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றமற்றவர் என்றால் விசாரணைகளின் மூலம் அதனை நிரூபித்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE