நீதிபதி மீதான துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்தும், சட்டத்துறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் இன்ற பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மு.சிற்றம்பலம் கருத்துத் தெரிவிக்கையில்,
நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் அவரது மெய்பாதுகாவலர் மரணமடைந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வவுனியா மாவட்டத்திலும் 8 வருடங்களாக பணியாற்றியவர்.
அவரது துணிச்சலான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை யாவரும் அறிவர். பல சவால் மிக்க வழக்குகளை விசாரித்து வரும் நிலையில் அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் நீதித்துறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகும்.
இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.
விசாரணைகள் முழுமை பெறாத நிலையில் பொலிசார் இத் தாக்குதல் தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துக்கள் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என கோருவதுடன், நீதிபதிகளின் பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த பணிப் புறக்கணிப்பின் போது சட்டத்தரணிகள் தமது வாயை கறுப்புத் துணிகளால் கட்டிக்கொண்டு ஈடுபட்டுள்ளதோடு, வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல் நீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து வவுனியாவில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக்தைக் கண்டித்தும், மரணித்த அவரது மெய்பாதுகாவலருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலம் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த துப்பாக்கிப்பிரயோகமானது நீதித்துறைக்கு விடப்பட்ட அச்சறுத்தல் என்பதுடன், தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு தாக்குதலாகவும் இதை கருதுவதாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இதில் பொலிசார் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர்கள் இதன்போது மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக உள்ளூர் பகுதிகளுக்கான போக்குவரத்து இன்றி மக்கள் சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகள் வழமைபோல் சேவையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.