வார்னரின் அதிரடியால் ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஐதராபாத்: போராடி வீழ்ந்த பஞ்சாப்

334

 

ஐதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இன்றைய 48வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணியின் அணித்தலைவர் வார்னர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் 24 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஹென்ரிக்ஸ் 28 ஓட்டங்களும், இயான் மார்கன் 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் ஓட்டத்தை வெகுவாக உயர்த்திய அணித்தலைவர் வார்னர் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் கடந்து 81 ஓட்டங்களுடன் 4வது விக்கெட்டுக்கு ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்டமிழக்காமல் லோகேஷ் ராகுல் 17 ஓட்டங்களும், கருண் ஷர்மா 11 ஓட்டங்களும் எடுத்தனர். இதனையடுத்து 186 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி போராடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் 24 ஓட்டங்களும், வோக்ரா 20 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் மட்டும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை போராடி 2 பவுண்டரி, 9 சிக்சருடன் அரைசதம் கடந்து 89 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் ஐதராபாத் சார்பில் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டும், பிபுல் ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஐதராபாத் அணித்தலைவர் வார்னர் தெரிவு செய்யப்பட்டார்.

SHARE