வாழ்வின் எழுச்சித் திட்டத்துக்கான நிதிப் பங்கீட்டில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டது எனக் கூறி வவுனியா முதலியாகுளம் மக்கள் செட்டிக்குளம் பிரதேச செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இந்த முறைகேட்டுக்கு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனே காரணம் எனவும் மக்கள் குற்றஞ்சாட்டினார்.
மீள்குடியேறி அன்றாட வாழக்கையை கொண்டு நடத்த முடியாமல் தடுமாறி வரும் தங்களுக்கு வாழ்வின் எழுச்சி திட்ட நிதி வழங்கப்படாமல் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கு அந்த நிதி வழங்கப்பட்டது. இதற்கு சில சமுர்த்தி உத்தியோகத்தர்களும் உடந்தையாக செயற்பட்டனர் எனத் தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் செட்டிக்குளம் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ மற்றும் வட மாகாகண சபை உறுப்பினர் சி.சிவமோகன் ஆகியோரும் பங்கேற்றனர்.