விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர்-அனந்தி சசிதரன்

398
காணாமல் போனவர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு உறவுகள் நீதிமன்றில் ஆஜராக இராணுவம் தடை:
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் , உறவினர்களினால் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் திருமதி  அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் பின்னர் காணாமல்போயினர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் 3வருடங்களுக்கு முன்னர் காணாமல்போனவர்களின் உறவினர்கள் வவுனியா நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

குறித்த வழக்கு தற்போது முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் திகதிகளில் மட்டும் படையினரின் ஒழுங்கமைப்பில் எமக்கு எதிரான போராட்டங்கள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த முறையும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தலைமைதாங்கி நடத்தியவர் மகாதேவா என்பவர்.

அவருடைய பிள்ளை ஒன்றும் காணாமல்போகவில்லை என்பதுடன், அவருடைய பிள்ளைகளை விடுதலைப் புலிகள் கைதுசெய்யவுமில்லை.

இந்நிலையில் அவர் விடுதலைப் புலிகள் பிடித்த பிள்ளைகள் எங்கே? என கேட்டு போராட்டம் நடத்துகின்றார்.

மேலும் அவர் படையினரின் பண்ணையில் கப்டன் தரத்தில் உள்ள ஒருவர்.

எனவே இவ்வாறான போராட்டங்கள் நாங்கள் நீதிமன்றுக்கு சென்றுவிடக்கூடாது என்பதனை நோக்காக கொண்டு நடத்தப்படுகின்றது.

அதற்குப்படையினர் முதன்மையாக இருந்து செயற்படுகின்றார்கள்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிபதியிடம் தெரிவித்து, கண்கண்ட சாட்சியாக இருக்கும் நாங்கள் பாதுகாப்பாக நீதிமன்றுக்கு சென்று வருவதற்கான பொலிஸ் பாதுகாப்பை ஒழுங்குபடுத்திக் கொடுக்குமாறு நாங்கள் நீதி மன்றில் கோரவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

SHARE