விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல். 

308
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கடந்த 29.03.2015 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து, மாவட்டத்தின் குறைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடியபோதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் (கச்சேரியில்) நடைபெற்ற இந்தக்கலந்துரையாடலில், அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மேலும் வலியுறுத்தியதாவது,     
போரினால் மிகவும் மோசமான அழிவுகளை சந்தித்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் அப்போரினால் உடல் அவையங்களை இழந்தும், கடும் காயமுற்றும் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இதேநிலைமையே காணப்படுகின்றது.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், இரண்டு கால்களையும், கைகளையும், கண்களையும் இழந்துள்ளோர், கண் அல்லது கை அல்லது காலை இழந்துள்ளோர் என்று வாழ்ந்துவரும் நிலையில், இவர்கள் தமது நிரந்தர வாழ்வாதாரத்துக்கு வழியேதுமின்றி பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் நாளாந்தம் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
எனவே இவ்வாறானவர்களின் தகவல்களை முழுமையாக திரட்டி, அவர்களுக்கு நிரந்தர மருத்துவ உதவிகளும் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படல் வேண்டும். அத்துடன் மாதாந்த கொடுப்பனவு வழங்குவது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
அதேபோல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்கள் உள்ளடங்கலாக தலையிலிருந்து கால் வரைக்கும் உடலில் எறிகணைச்சிதறல்கள், குண்டுகளை சுமந்தவாறு கடும் இன்னல்களுக்கும் அவஸ்தைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இவற்றை அகற்ற விசேட வைத்திய நிபுணர்களை அழைத்து சிகிச்சை அளிக்கப்படல் வேண்டும்.
மேலும் இறுதி கட்டப்போரினால் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் முகாமுக்கு சென்ற நிலையில் விவசாயிகளின் உழவு இயந்திரங்களும் உபகரணங்களும், பொதுமக்களின் பல்வேறு வகையான வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தென்னிலங்கைக்கு கடத்தப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நஸ்டஈடுகள் வழங்கப்படுதல் வேண்டும் என்றும்,
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அக்காணிகளில் உரித்துடைய மக்கள் மீளக்குடியமர்த்தப்படுதல் வேண்டும் என்றும் ஆனந்தன் எம்.பி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துப்பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
புனர்வாழ்வு அமைச்சும் மாகாணசபையும் இணைந்து குறித்த விவரங்களின் பிரகாரம் தகவல்களை திரட்டுமாறும், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கிளிநொச்சியில் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்றை நிறுவி, அதனூடாக மருத்துவ வாழ்வாதர உதவிகளை வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
unnamed (9)  unnamed (11)
SHARE