விடுதலைப்புலிகள் இயக்கத்தை இரண்டாகப் பிரித்து வெற்றிக்கு வித்திட்ட பெருமை ஒரு முஸ்லிமையே சாரும்!
உலகத்தில் பலம் பொருந்திய ஒரு இயக்கமென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் தான். அந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை இரண்டாகப் பிரித்து யுத்த வெற்றிக்கு வித்திட்ட பெருமை ஒரு முஸ்லிமையே சாரும். அதுவும் இந்த கிழக்கு மண் ஈண்றெடுத்த பிள்ளையென்றால் அது மிகையாகாது என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அண்மையில் காத்தான்குடியில் இடம் பெற்ற நிகழ்வென்றில் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது,
இந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவர்கள் சொல்லுவது போன்று சிங்கள இராணுவம் மாத்திரம் இந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் அல்ல. இந்த யுத்த வெற்றியில் முஸ்லிம்களுக்கு பாரிய பங்குண்டு.
இன்று இந்த நாட்டில் பொலீஸ் தினம் என்ற ஒன்று கொண்டாடப்படுகின்றது. ஆனால் அந்த பொலீஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்று எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். உண்மையில் அது தான் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இடம் பெற்ற அசம்பாவிதத்திலிருந்து தன் அதிகாரியைப் பாதுகாக்கவேண்டுமென்பதற்காக தன் உயிரைப் பணயம் வைத்த ஒரு முஸ்லிம், அந்த முஸ்லிம் படைவீரரின் நினைவு தினம் தான் இன்று கொண்டாடப்படுகின்ற பொலீஸ் தினம். இவ்வாறு இந்த நாட்டின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் முஸ்லிம்களின் பங்கு ஒரு முக்கிய இடத்தில் இருந்தும் அது மழுங்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகின்றது.
அது மாத்திரம் அல்ல இந்த நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக லைசன் இல்லாமல் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த பொதுபலசேனா அமைப்பு இந்த தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து லைசனையும் பெற்றுக் கொண்டுள்ளது என்றால் எதிர்வரும் நாட்களில் அவர்களின் ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளவேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அதிகூடிய காலம் சுமார் 44 வருடங்கள் அங்கம் வகித்த அக் கட்சியின் செயளாலர் மைத்திரிபால சிறிசேனா உட்பட பல முக்கிய அமைச்சர்கள் இந்த நாட்டில் நிலவுகின்ற சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டி நல்லாட்சியை ஏற்படுத் வேண்டுமென பொது எதிரணியில் இணைந்துள்ள போதும் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து பணத்திற்கு சோரம் போனவர்களாக இருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீதும், அவர்களின் வணக்கஸ்தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட போது அவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டுமென குரலெழுப்பிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்ளுக்கு இப்போது அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆனால் அவர்களெள்ளாம் இன்று வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்களென்றால் வாக்களித்த முஸ்லிம்களுக்கும், தங்களின் வாக்குறுதிகளுக்கும் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட பொறுப்புகளும் அமானிதம், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் பற்றி நாளை மறுமையில் அல்லாஹுத்தஆலா கேள்வி கேட்பான். அப்போது கைசேதப்படாமல் பதில் கூறுவதற்கு தயாராக இருக்கவேண்டும்.
நாம் அல்லாஹ்வைப் பயந்து எமது அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.
ஒன்றுபடுவோம். எமது முஸ்லிம் சமூகத்தின் விடிவிற்காக ஒன்று பட்டுள்ள கூட்டாட்சியில் இணைந்து பொது வேட்பாளரை வெற்றி பெறச்செய்வதனூடாக இந்த நாட்டில் முஸ்லிம்களின், சிறுபான்மையினரின் இருப்பை உறுதிப் படுத்துவோம் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.
அண்மையில் தேசிய நல்லாட்சிக்கான முன்னணியினால் காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.