. விடுதலைப்புலிகள் இயக்கத்தை தமது நாடுகளில் தடைசெய்து அதன் நடவடிக்கைகளை முறியடிக்க உதவிய இந்நாடுகள் தற்போது மகிந்த இராஜபக்சவை எதிர்த்து வருகிறது

478

ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில், இலங்கைத்தீவின் இனமுரண்பாடு என்பது ஒரு பேசுபொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி நிற்கிறது. அதே சமயம் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவிரும்பும் வல்லாதிக்க நாடுகள் இப்பிரச்சனையை பயன்படுத்த விரும்புவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ltteTrinco_3 chennai-hotel-03 ltte_sla ltte-leaders ltteTrinco_3 mahinda-rajapaksa-ban-ki-moon-2010-9-24-15-21-27  Prabhakaran_and_Solheim

துரதிர்ஸ்டவசமாக இந்த ஆதிக்கச்சமரில் தமது விருப்பத்திற்கு மாறாக இலங்கைத் தீவில் வாழும் மக்களும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் பாதிப்பிற்குள்ளாகிவரும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியதாக கொண்டுவரப்படும் தீர்மானங்கள், அவர்களது கருத்துகளை உள்வாங்காமலேயே நிறைவேற்றப்படுகின்றன. தவிர்க்க முடியாமல் சர்வதேச அரசியலில் உள்வாங்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள், இச்சூழலை தமது அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கு எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பதிலேயே அவர்களது எதிர்காலம் தங்கியுள்ளது.

கடந்த வாரம் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘Sri Lanka’s Killing Fields: War crimes Unpunished’ விபரணத்தை தமிழரல்லாத என்னுடைய பணியக நண்பர்களும் பார்த்தார்கள். அவர்கள் பொதுவில் உலக அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். ஆகையால், சிலதினங்களுக்கு முன்னர் இவ்விவரணம் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட முதன்மையான கேள்விகளையும் பதில்களையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். கேள்விகள், ஏன் இப்படுகொலைகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது? இதனை ஏன் சர்வதேச நாடுகள் தடுக்கவில்லை? என்பதாக அமைந்திருந்தன. வழங்கப்பட்ட பதில்கள்

mahinda-rajapaksa-ban-ki-moon-2010-9-24-15-21-27

  1.   விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டதால் அதனை அழிக்க வேண்டும் என்பதில் நாடுகளுக்கிடையில் பொதுவான உடன்பாடு இருந்தது.
  2.   குறிப்பிட்டுச் சொல்லும்படியான கனிமவளங்கள் அப்பகுதியில் இல்லை. ஆகையால் குறித்த பிரதேச மக்களையிட்டு சர்வதேசம் அக்கறை கொள்ளவில்லை.
  3.   பொதுவில் மனிதவுரிமைகள் விடயத்தில் அக்கறை குறைந்து விட்டது.

வேறுபட்ட கருத்துகள் வெளியிடபட்டபோதிலும், இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் இது ஒரு இனப்படுகொலை என்ற விடயத்தில் உடன்பட்டனர். இது சாட்சிகளற்ற யுத்தம் அல்லது சர்வதேச சமூகத்தை சிறிலங்கா அரசு ஏமாற்றி விட்டது போன்ற கருத்துகள் இங்கு வெளியிடப்படவில்லை என்பது அவதானிக்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதில் உடன்பட்ட சர்வதேச நாடுகள் அதற்காக வேண்டுமானால் எத்தனை ஆயிரம் மக்களையும் பலிகொள்ளப்படுவதனையும் பொறுத்துக் கொள்ள தயாராக இருந்தன. கொல்லப்பட்ட இந்த மக்களை முன்வைத்தே இன்று அரசியல் நடாத்த சர்வதேச சக்திகள் முனைகின்றன என்பதனை புலப்படுத்துவதாக அமெரிக்காவின் தீர்மானமும், ஜ.நா. மனிதவுரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.

1 copy

இனி, ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் காணப்படும் மூன்று முக்கிய விடயங்களைப் பார்ப்போம்:

  • நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்
  • நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்
  • மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

இவ்வறிக்ககையில், சர்வதேச சட்டவிதிகள் பாரியளவில் மீறப்பட்டமை தொடர்பில் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கவனம்செலுத்தவில்லை என்பதனை தாம் கருத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விடயங்களில் முதலிரண்டும் சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதும் முழுமையற்றதுமான நல்லிணக்க ஆணைக்குழுவினை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளன.

சிறிலங்காவின் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதனை உறுதிசெய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறையாக காணப்படும் இறுதியான விடயமே சிறிலங்கா அரசாங்கத்தையும் அதன் ஆதரவுச் சக்திகளையும் கலவரப்படுத்துகிறது. தனது கல்வியில் அக்கறை செலுத்தாத மாணவன் ஒருவன் தனது பரீட்சை பெறுபேறுகளை முன்கூட்டியே ஊகித்துக் கொள்வதனைப்போல், அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் இருபத்திரண்டாவது கூட்டத் தொடரில் எவ்விதமான அறிக்கை வெளிவரும் எனபதனை கொழும்பு அறிந்து வைத்துள்ளது. இந்த இடத்தில் ஐ.நா. இன் தலையீடுகள் ஏற்படுவதை தவிர்க்கவே இத்தீர்மானம் நிறைவேறாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மேற்படி தீர்மானம் தொடர்பாக கருத்துவெளியிட்ட சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்காவின் நீண்டகால நண்பர்களும், வர்த்தகப் பங்காளிகளுமான நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தை தமது நாடுகளில் தடைசெய்து அதன் நடவடிக்கைகளை முறியடிக்க உதவிய இந்நாடுகள் தற்போது மகிந்த இராஜபக்சவை எதிர்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த இராஜபக்சவின் அரசியல் எதிரியாக மாறிவிட்ட மங்கள சமரவீர விரும்புவதைப் போலவே அமெரிக்காவிற்கும் அதன் நேச சக்திகளுக்கும் இலங்கைத் தீவில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.

இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்கா அதிக அக்கறை செலுத்தியமையால்,ஆதரவு தேடும் முயற்சியில் இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்ரன் நேரடி கவனத்தைச் செலுத்தியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் கூட இத்தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு இராஜங்க திணைக்களத் தரப்பினரால் உத்தரவிடப்பட்டது. இவை தெற்காசியப்பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்டுவரும் ஆதிக்கப்போட்டி வலுவடைந்து வருவதனையும், இலங்கைத்தீவு விவகாரம் இதற்கு பயன்படப்போகிறது என்பதனையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இத்தீர்மானத்தை எதிர்த்த, ஆதரித்த நடுநிலை வகித்த நாடுகள் இந்த அணிகள் சார்ந்தே செயற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம் இவ்வாதிக்கப் போட்டியில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறமுடியும்.

சர்வதேச அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எமது நலனுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதிலேயே ஈழத்தமிழரின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் கட்டமைக்கப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே சர்வதேச அரசியல் நகர்வுகளில் பலியிடப்பட்டவர்களான ஈழத்தமிழர்கள் இம்முறை மீண்டெழுவது பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளார்கள்.

கோபி

 

 

SHARE