விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து .இந்தியாவும் பிரித்தானியாவும்ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

420
tigersx32
இந்தியாவும் பிரித்தானியாவும் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன
உலகில் பல நாடுகளில் தற்போது பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவது குறித்து இந்தியாவும் பிரித்தானியாவும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் அண்மையில் பதவியேற்ற பிரதமரான நரேந்திர மோடி விடுதலைப் புலிகளின் தடை தொடர்பில் ஆராய கடந்த வெள்ளிக்கிழமை விசேட குழுவொன்றை நியமித்தமை இதன் முதல் கட்ட நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

1991 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் காங்கிரஸ் அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து வந்துள்ளது.

இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒரு சந்தேக நபரை தவிர ஏனைய அனைவரும் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்படாத மட்டத்தில் இருப்பது ஆகிய காரணங்களினால் அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பில் இந்திய அரசாங்கம் தற்போது ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் இலங்கை அரசின் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கே.பியிடம் விசாரணை நடத்த அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்தும் கோரி வந்ததுடன், இலங்கை அரசாங்கம் அதனை கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை.

இப்படியான சூழ்நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து இந்தியா தீர்மானிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சியில் இருந்து அண்மையில் அகற்றப்பட்ட இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் இலங்கை சம்பந்தமாக தளர்வான போக்கை கடைபிடித்து வந்த நிலையில், இந்தியாவின் புதிய அரசாங்கம் இதற்கு முற்றிலும் மாறான கொள்கை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்தியாவை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்லக் கூடிய பாகிஸ்தானின் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் இலங்கையில் எந்த தடையுமின்றி செயற்படுவது குறித்து இந்தியா கூடிய அவதானத்தை செலுத்தி வருகிறது.

அதேவேளை விடுதலைப் புலிகள் தொடர்பில் இதேபோன்ற நிலைமை பிரித்தானியாவிலும் ஏற்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி பல அமைப்புகளும் தனி நபர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகள் தொடர்பான பிரித்தானிய உள்துறை அமைச்சின் நிலைப்பாடு என்ன என பிரித்தானிய நீதிமன்றம் அந்நாட்டு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது முற்றாக பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள பின்னணியில், அந்த அமைப்பின் மீதான தடையை நீக்குவதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு மிகப் பெரிய செய்தி ஒன்றை அனுப்புவது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பேசப்படுகிறது.

பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது அடுத்த வருடம் நடைபெறவுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவருகிறது.

 

SHARE