தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மலேசியாவில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை பதிந்து அகதிகளாக நடித்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக மலேசிய உள்துறை துணையமைச்சர் டத்தோ வன் ஜூனைடி துங்கு ஜாபர் தெரிவித்துள்ளார்.
அகதிகள் என்ற அனுதாபத்தின் பேரில் பயங்கரவாதத்தை வளர்க்கும் போலி அகதிகள் யார், விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு தொடர்பிலான தகவல்களை மலேசிய அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் தம்மை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பதிவு செய்து கொண்டு தவறான தகவல்களை மலேசியர்களுக்கு வழங்கி பணத்தை சேகரித்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் கடற்படை கப்பல்களையும் ஆயுதங்களை கொள்வனவு செய்ய போதுமான பணத்தை சேகரித்துள்ளதாக உள்துறை துணையமைச்சர் எச்சரித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் விமானப் படையின் பிரதி தலைவர் உட்பட மூன்று புலி உறுப்பினர்களை மலேசிய பொலிஸார் கைது செய்தனர்.
மலேசியா பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புலிகளின் விமானப் படையின் பிரதித் தலைவரான குசாந்தன் கொலன்னாவ, கெரவலப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் விமானப்படை தளம் ஆகியன மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முக்கிய சூத்திரதாரியாக செயற்பட்டவர் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.