வித்தாகிப்போன மாவீரர் தியாகங்களை மதித்து அரசியல் பலத்தை நிரூபிப்போம்

228
சர்வதேசத்திற்கு இத்தேர்தல் ஊடாக மிக முக்கியமான செய்தியைச் சொல்லப்போகும் தமிழர்களாகிய நாம், எமது பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த வேண்டிய காலகட்டமிது. தமிழர்களின் அரசியல் பலத்தை தமிழர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

எமது விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர் தியாகங்களை மதித்து எமது அரசியல் பலத்தை நிரூபிப்போம்.

அவர்கள் கொண்ட விடுதலை இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்தும் பலத்தோடு நாம் பயணிப்போம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன்  தெரிவித்துள்ளார்.

தழிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரப் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி பூநகரி வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வேட்பாளர் சிவஞனம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறுகின்ற தேர்தல்கள் ஒவ்வொன்றும் மிகமுக்கியமானதாகவே காணப்படுகின்றன. இந்தத் தேர்தல்களில் தமிழர்களாகிய நாம் எமது பலத்தை நிரூபித்துக் காட்டவேண்டியவர்களாகக் காணப்படுகின்றோம்.

இந்த மண்ணிலே தமிழர்களாகிய நாம் கடந்த எழுபது ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டவர்கள், அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள், பேசுவதற்கான உரிமைகள்கூட மறுக்கப்பட்டவர்கள் நாங்கள்.

இந்த மண்ணிலே அடிமைகளாகவேதான் தொடர்ந்தும் வாழவேண்டுமா என்ற குழப்பங்களோடு ஏங்கியவர்கள் நாம்.

இந்த மண்ணிலே எமது விடிவுக்கான ஒரு அறவழிப் போராட்டத்தை தந்தை செல்வா தலைமையில் 1970 களின் இறுதிக் காலம்வரை முன்னெடுத்தவர்கள்.

தமிழர்களாகிய எங்களின் நியாயமான கோரிக்கைகள் மறுக்கப்பட்டு, அகிம்சை வழிப் போராட்டம் பேரினவாதச் சிங்களத்தமைகளால் ஏற்றுக்கொள்ளப்படாது எம்மீது ஆயுத ரீதியான அடாவடிகள் அழிப்புக்கள் சித்திரவதைகள் தொடர்ந்ததன் விளைவாக அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில்,

அதற்கெதிராகத்தான் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையிலே தந்தை செல்வா அவர்களால் தமிழீழம்தான் எமக்கான இறுதித் தீர்வு என்ற கோரிக்கை கொண்டுவரப்பட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதற்கமைவாக 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலே 18 ஆசனங்களைத் தமிழ் மக்கள் வடக்குக் கிழக்கிலே வழங்கி தமது பலத்தை நிரூபித்துக் காட்டி ஒரு ஆணையை வழங்கி எங்களுக்குத் தீர்வாக தமிழீழம்தான் அமைய வேண்டும் என்ற ஆணையை அப்போதே மக்கள் வழங்கியிருந்தார்கள்.

அதற்குப் பிற்பாடும் இலங்கை அரசு எங்களை ஏமாற்றி எங்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்கி, ஒடுக்கப்பட்டு தமிழர்களை நசுக்குவதற்காக தங்களுக்கேற்ற சட்டங்களைக் கொண்டு வந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு நாம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்,

1983 ஆம் ஆண்டில் ஒரு கண்ணிவெடித்தாக்குதலோடு தமிழினத்தின் இனவெறியர்களுக்கெதிரான தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் முதன்மை நிலையைப் பெற்றிருந்தது.

அடக்குமுறைகளுகு எதிரான ஆயுத ரீதியான தியாகங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டம் 2009 இன் இறுதிவரை முள்ளிவாய்க்கால்வரை தமிழினப் பெருந்தலைவன் பிரபாகரனுடைய தலைமையின் கீழ் நடத்தப்பட்டது.

தமிழர்களாகிய நாங்கள் ஒரு தேசிய அடையாளத்தை இந்த உலகத்தில் பெற்றுக்கொள்வதற்கும் தமிழர்கள் ஒரு பேசுபொருளாக இந்த உலகத்தில் காணப்படுவதற்கும் காரணமாக அமைந்த ஒவ்வொரு மாவீரர்களினதும் போராளிகளாக இந்த மண்ணிலே தங்களுடைய அவயவங்களை இழந்த நிலையிலும்,

இன்றைக்கும் எங்களுடைய தேசிய உணர்வோடு இந்த மண்ணிலே வாழுகின்ற அவர்களுமைய சிந்தனைகளோடு நாங்கள் அந்த விடுதலைப் பயணத்தில், அந்த இலட்சியப் பயணத்தில் பாதையை மாற்றி தொடர்ந்தும் உறுதியோடு பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

அந்தப் பயணம் தொடர்வதன் ஒருகட்டம்தான் ஒவ்வொரு தேர்தல்களிலும் நாம் வாக்களிப்பதும் ஒவ்வொரு செய்தியை இந்த உலகத்துக்குச் சொல்வதும் ஆகும். அதற்காக நாம் ஒரு உறுதியான பலம்மிக்க ஆணையை நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

அதனால்தான் எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயா கேட்கிறார் “தமிழ் மக்களாகிய நீங்கள் உங்களுடைய அரசியல் பலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைவரும் திரண்டு வாக்களித்து அதிகப்படியான ஆசனங்களைத் தாருங்கள்.

2016 ஆம் ஆண்டிலே தமிழ் மக்கள் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர்களுடைய வரலாற்று ரீதியான சரித்திரபூர்வமான நிலத்தில் எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு தன்னாட்சி உரிமைகொண்ட,

சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நாங்கள் பெற்றுத் தருவதற்கு இருபது ஆசனங்களுக்குக் குறையாத பலம் மிக்க ஆணையாக தமிழர்கள் பலத்தை நிரூபிக்கின்ற ஆணையாக இருக்கட்டும்” என்ற செய்தியைப் பகிரங்கமாக விடுத்திருக்கின்றார்.

எனவே தமிழ் மக்களுடைய பலத்தை வெளிப்படுத்துகின்ற தேர்தலாக இத்தேர்தலும் அமைந்து காணப்படுகின்றது.

2010 ஆண்டு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் அடாவடித்தனங்களுக்கு மத்தியிலும் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது அடங்கிப்போகாது தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எங்களுக்கே உங்கள் ஆணையை வழங்கி தமிழர்களின் பலத்தை நிரூபித்திருந்தீர்கள்.

உலகத்திற்கு அதனூக ஒரு செய்தியைச் சொல்லியிருந்தீர்கள். எமது மக்கள் பலத்தினூடகவும் தியாகங்களினூடாகவும்தான் எமது பிரச்சினை இப்போது ஐக்கிய நாடுகள் சபைவரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எங்களை முள்ளிவாய்க்காலிலே வகைதொகையின்றி, ஈவிரக்கமின்றி அழித்தொழித்து அட்டகாசம் புரிந்த இறுமாப்போடு வாழ்ந்த பேராசை பிடித்த இனவாதி மகிந்த ராஜபக்ஷவைக்கூட தேர்தல் மூலம்தான் இந்த அரசியல் அரங்கிலிருந்து அகற்றி கதி கலங்கவைத்துள்ளீர்கள்.

இலங்கையின் ஜனாதிபதியாக உச்சக்கட்டத்தில் இருந்த அவர் இப்போது தானும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வந்துவிட வேண்டும் என்று இத்தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இந்தத் தேர்தல் சர்வதேசத்தால் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவதானிக்கப்படுகின்றது. அதனால்தான் அண்மையிலே அமெரிக்கா சொன்னது, இலங்கையிலே நடைபெறுகின்ற தேர்தல் ஆசியாவிலேயே நாங்கள் மிகமுக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கப்படுகின்ற தேர்தல் என.

இந்தியா சொல்கின்றது இந்தத் தேர்தல் இலங்கையிலே ஒரு புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தேர்தலை உற்று நோக்குகின்றது.

ஆகவே இந்தத் தேர்தல் தமிழர்களாகிய எங்களைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமானதாகும். இந்தத் தேர்தலினூடாக வருகின்ற 17 ஆம் திகதி தமிழர்களாகிய எங்களின் பலத்தை நிரூபித்து உலகத்திற்கு ஒரு செய்தியை நாங்கள் சொல்லப்போகிறோம்.

எங்களோடு காணப்படும் சர்வதேச சக்தியை எமது அரசியல் பலத்தால் கையாண்டு மிகவும் நிதானமான முறையில் அணுகப்பட வேண்டும். அப்படி அணுகப்படாதுவிட்டால் மீண்டும் நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவோம்.

ஏற்கனவே நாங்கள் துரோகத்தனங்களால் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். அப்படியான துரோகத்தனங்களால் பொய்யான பரப்புரைகளைச் செய்து தமிழர்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடித்து பலமின்றியவர்களாக்கி தமிழர்களை அழித்தொழிப்பதற்காகப் பலவழிகளிலும் பலர் முயன்று வருகின்றார்கள்.

அது தமிழ் மக்களாகிய உங்களக்கு நன்றாகவே தெரிகின்றதுதானே. தமிழ் மக்களின் பலம் மிக்க அரசியல் சக்தியாகக் காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர்களின் பலத்தினூடாக எமது இனவிடுதலைக்கு உங்கள் பங்களிப்பை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்புகின்றோம் என்றார்.

SHARE