வித்தியாவின் கொடூரமான கொலையை வைத்து அரசியல் செய்யாதீர்கள்… இளைய சமூகமே வன்முறையை கையில் எடுக்காதீர்கள்… எச்சரிக்கிறார் வடக்கு மீன்பிடி அமைச்சர்
கடந்த வாரம் கொலைக் காமுகர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவுக்காக உலகம் முழுவதும் இரங்கல் தெரிவித்துக்கொண்டும், கொலைகாரருக்கு அதிக பட்ச தண்டனை வழங்கக் கோரியும் கண்டனங்கள் தெரிவித்து நிற்கும் இவ்வேளையில் அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் பொருட்டு சில அரசியல் சக்திகள் தமது அராஜக கும்பலை பயன்படுத்தி நீதி மன்றுக்கு பங்கம் விளைவித்தும் நாட்டின் சுமூகமான சூழலுக்கு இடையூறு விளைவித்தும் வருவது மிகவும் வேதனை அளிக்கின்றது.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் நீதியான விசாரணை நடாத்த வேண்டி அழுத்தங்களை கொடுக்கவேண்டியிருப்பினும், நீதி மன்றுக்கு கல் வீசுவதோ, பொதுச் சொத்துக்கள் தனியார் சொத்துக்கள் போன்றவற்றை சேதப்படுத்துவதனாலோ பயனேதும் கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு திட்டமிட்ட வகையில் அடாவடித்தனங்கள் செய்யும் போது வித்தியாவின் வழக்கு வேறு திசைக்கு திரும்பி, நீதிமன்றை தாக்கியவர்கள் அல்லது அராஜககாரர்களின் பக்கம் அது கூடிய கவனத்தை ஈர்ப்பதாக மாறி கொலைக்குற்றவாளிகள் இலகுவில் தப்பி விடுவார்கள். எனவே இளைய சமுதாயம், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் வாதிகள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது மாணவியின் கொலையை அரசியலாக்காது கொலையாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க அமைதியாக சிந்தித்து செயற்ப்படுங்கள்.
“இளைய சமுதாயமே !!! இது உணர்ச்சிவசப்படவேண்டிய நேரமல்ல… உணர்வு பூர்வமாக சிந்திக்க வேண்டிய தருணம்….”
மாணவியின் கொலையுடன் அச்ச உணர்வுடன் இருக்கும் மக்களை மேலும் பயத்துக்குள்ளாக்காது, ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக குற்றம் சுமத்தாதும், நீதியான விசாரணைக்கும் கடுமையான தண்டனையை பெற்றுக்கொடுக்கவும் சகலரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரும் சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரன் பகிரங்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.