வித்தியின் வழிகாட்டலில் வடக்கில் புதிய அரசியல் கட்சி உதயம்- புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்

704

 

தமிழ்த் தேசியக் கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக முன்னாள் ‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவருமான நடேசபிள்ளை வித்தியாதரன் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியொன்று வடக்கில் உதயமாக இருப்பதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.

முன்னாள் போராளிகளாக இருந்து தமிழ்த் தேசிய உரிமைகளுக்காகப் போராடிப் பின்னர் அரசின் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்ட முக்கிய உறுப்பினர்கள், புலிகளின் ஆதரவாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்ற பலர் உள்வாங்கப்பட்டு இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், இதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் தற்போது வித்தியாதரன் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.

தமிழரின் தாயகம் மற்றும் தனித்துவத்தைக் காப்பதற்காக பற்றுறுதியோடும், திடசங்கத்தோடும் தம்மையே அர்ப்பணிக்க முன்வந்தோரும், ஆதரவாளர்களும் தமிழர்களின் ஐக்கிய அரசியல் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படாத புறக்கணிப்பு வேண்டுமென்றே நீடிக்கப்படுவதால், அவர்கள் அனைவரையும் அரசியல் ரீதியாக ஒரு புதிய ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் ஒன்றிணைத்து, அதன் மூலம் தமிழர் தம் ஐக்கியத்தையும், ஜனநாயக அரசியல் எழுச்சியையும் வலுப்படுத்தும் ஒர் அவசர தேவை எழுந்திருப்பதன் பின்னணியிலேயே இந்தக் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவிருப்பதாக வித்தியாதரன் ‘கொழும்பு மிரர்’ க்குத் தெரிவித்தார்.

இது குறித்த விடயங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும், தற்போது மக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் உள்வாங்கும் இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்திருப்பதாகவும், தனது இந்த முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனாலும் இது எந்தவகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி அல்ல என்றும், உண்மையாகவே மக்களுடன் நின்றவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கும் ஒரு நடவடிக்கை மட்டுமே என்று வித்தியாதரன் மேலும் தெரிவித்தார்.

ஒரு பத்திரிகையாளனாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைப் பக்கச் சார்பின்றி மிகவும் ஆழமாகவும், நுணுக்கமாகவும் செய்திகளை வழங்கிய வித்தியாதரன், இலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தத்தை மட்டுமல்ல, காலத்திற்குக் காலம் இடம்பெற்ற பல்வேறு சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் நேரடியாகச் சென்று செய்தி சேகரித்திருக்கிறார்.

இவரது இந்தப் பணிக்காக புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் மிகவும் நெருக்கமான உறவைக்கொண்டிருந்த இவர், அரசியல் ரீதியாக அவரால் வழிப்படுத்தப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

SHARE