வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வில்பத்து பகுதியில் காடழிப்பு ஒன்றை மேற்கொண்டு மீள்குடியேற்றம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில் பல்வேறு சூழல் பாதுகாப்பு அமைப்புகள் இந்தக் காடழிப்புக்கு எதிராகவும், தொடர்ந்தும் காடழிப்பு மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன.
இந்த வழக்கின் முதலாவது விசாரணை நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது வில்பத்து காடழிப்பு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து சட்டமா அதிபர் தரப்பின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் அக்டோபர் 7ம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினம் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.