(வீடியோ) | “சர்ச்சைக்குத் தீர்வுகாண விக்னேஸ்வரனால் முடியும்”

301
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடொன்று நிலவுகிறது. அண்மையில் யாழில் இடம்பெற்ற வைபவமொன்றில், பாடசாலையில் மாணவர்கள் சண்டையிட்டு கோவித்துக் கொள்வது போல் இருவரும் முகத்தைப் பார்த்துக் கொள்ளாது, பேசாது இருந்துள்ளனர். ஆனால், இவர்கள் எதற்காக கோபப்பட்டார்கள் என்று தமிழ் மக்களுக்குத் தெரியாது. அதை இவர்கள் இரண்டு பேருமே வெளிப்படுத்தவும் இல்லை.அலரிமாளிகைக்குச் சென்று மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யக்கூடிய வகையில் மனப்பக்குவம் கொண்ட தலைவரை ரணில் விக்கிரமசிங்க ஓரங்கட்டவேண்டிய அவசியம் கிடையாது.ஆகவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிப்படையாக, முழுமையாக இந்த சர்ச்சையான பிரச்சினை குறித்து தெளிவுபடுத்தலொன்றை மேற்கொண்டு, ஏற்பட்டிருக்கும் சிக்கல் நிலைமைக்கு தீர்வுகாணலாம் அல்லது அதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம்” என தினக்குரல் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் தெரிவிக்கிறார். வட மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டதன் பிறகு மஹிந்த அரசு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வட மாகாணத்தில் சுதந்திரமாக செயற்படக்கூடிய வகையில் கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. இந்த நிலையில், வட மாகாணத்தின் அதிகாரங்கள், விக்னேஸ்வரனிடம், டக்ளஸ் தேவானந்தாவிடம், ஆளுநரிடம் என பிரிந்தே இருந்தது. தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் அதே தந்திரோபாயத்தை கையாளப் பார்க்கிறார் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நிலவரம் குறித்து கேட்டபோது தனபாலசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர்” புதிய அரசு பதவிக்கு வந்தவுடன் நூறு நாள் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தார்கள். துரிதமாக அரசியலமைப்பில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே நூறு நாட்களை நிர்ணயிக்கிறார்கள் என்ற நம்பிக்கை மாற்றத்தைக் கொண்டுவந்த மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால், அதன் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வெளியிடப்பட்ட கருத்துக்களைப் பார்க்கும்போது பழையபாணியிலே கட்சி அரசியல் போட்டா போட்டிக்கு உட்பட்டவையாகவே இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை தனது கையில் எடுத்துக்கொண்டதன் பின்னரும் கூட அந்தக் கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியாமல் இருக்கின்ற நிலைமைதான் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கான பிரதான காரணங்களில் ஒன்று. ஐக்கிய தேசியக் கட்சி குறைந்தளவு ஆசனங்களை கொண்டிருந்தாலும் கூட, அது அரசை அமைப்பதற்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெறக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அரசியலமைப்பு சீர்த்திருத்தங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தவுடன் அதற்கான ஒரு வாய்ப்பு காணப்பட்டது. பின்னர் மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக கொண்டுவரப்படவேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒரு பின்புலத்திலே சுதந்திரக் கட்சிக்குள் குழப்பநிலை தோன்றத் தொடங்கியது. இந்த நிலையில் அரசியமைப்பு சீர்த்திருத்தத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என்று இருந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் தளர ஆரம்பித்தது. இறுதியில் தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி, அவர்களையும் இந்த அரசுக்குள் பங்கேற்க வைத்தால்தான் அவர்களது ஒத்துழைப்பை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஜனாதிபதியும் பிரதமரும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இணைந்து தீட்டிய திட்டத்தின் விளைவாகத்தான் இது இருக்க முடியும். “ஜனாதிபதி மைத்திரிபால முடிவை அறிவிக்க வேண்டும்” தற்போது எதிர்க்கட்சித் தலைவருக்கான பிரச்சினை வலுப்பெற்றுள்ளது. 41 ஆசனங்ளைக் கொண்டிருக்கிற ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறும்போது 126 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சி அதற்கு வெளி ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறது. இது உலகில் எங்கும் நடைபெறாத விசித்திரமான சம்பவமொன்று. ஆனால், தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேரை அமைச்சரவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பிரச்சினை வருகிறது. நான்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று நிமல் சிறிபாலடி சில்வா சொல்கிறார். ஆனால், உத்தியோகபூர்வமாக சுதந்திரக் கட்சி இந்த ஆட்சியில் பங்கேற்றுள்ளது. அந்த நிலைப்பாட்டை பற்றி கவலைப்படாமல் நான்தான் எதிர்க்கட்சித் தலைவர் என அவர் தெரிவிக்கிறார். மறுபக்கம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிக்கும் வாசுதேவ நாணாயக்கார, விமல் வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்தன போன்றோர் தங்கள் தரப்பில் எதிர்க்கட்சித் தலைவரை முன்னிறுத்துகின்றனர். அந்த வகையில் அடுத்தபடியாக அதிகூடிய ஆசனங்களைக் கொண்ட அதாவது, 13 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். ஆகவே, கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு – சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என சிங்கள கடும்போக்குவாதிகள் எச்சரித்து வந்திருக்கின்றனர். ஆகவே, இந்த பின்புலத்தில்தான் தினேஸ் குணவர்தன போன்ற இனவாத அரசியல் நோக்கம் கொண்டவர்களை கொண்டுவரப் பார்க்கிறார்கள். சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வரவேண்டும்; அறிவிப்பை செய்யவேண்டும். சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்துதான் இந்த அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால், சுதந்திரக் கட்சியில் இருக்கக்கூடிய எந்த உறுப்பினருமே எதிர்க்கட்சிப் பதவி குறித்து ஆசைப்படவோ போட்டிடவோ முடியாது என்ற அறிப்பை வெளியிட வேண்டும். “ரணில் கவலைப்பட மாட்டார்” 100 நாள் வேலைத்திட்டத்தில் இன்னும் கிட்டத்தட்ட 20 நாட்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் 19ஆவது சீர்த்திருத்தம் நிறைவேற்றப்படுமா? இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது. ஆனால், இன்றுவரை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களைப் பார்க்கும்போது அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் மானசீகமாக ஆர்வம் கொண்டவரல்ல. அவரது அரசியலை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு அது தெரியும். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிக்க வேண்டுமாக இருந்தால் அத்தகையதொரு கோஷத்தின் பின்னால் சேர்ந்துகொண்டால்தான் வெற்றிகொள்ள முடியும் என்ற காரணத்தினால் அதனை கையில் எடுத்திருந்தார். தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமற்போகும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்க கவலைப்படுவார் என்று யாரும் நினைக்க வேண்டாம். அதை தனக்கு ஏற்ற வகையில் எடுத்துக்கொண்டு அரசியலை முன்னெடுக்கக் கூடிய திறமை கொண்டவர் அவர். “தொடர்ந்து தவறாக வழிநடத்தப்படும் சிங்கள மக்கள்” நல்லாட்சியைப் பற்றி பேசுகின்ற அரசு, எதிர்காலத்தில் அரசியல் இணக்கத் தீர்வொன்றை நோக்கி உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையை தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படுத்தும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். அவ்வாறானதொரு நம்பிக்கை இன்னும் மக்கள் மத்தியில் ஏற்படவே இல்லை. ஆனால், ஜனாதிபதி, பிரதமர், சந்திரிக்கா அம்மையார் யாழ். சென்று இராணுவத்திடம் இருந்த சில ஏக்கர் காணிகளை மக்களுக்கு வழங்கியிருந்தனர். அதன் பிறகு ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று வந்திருந்தார். இது அரசியலுக்கு செய்யப்படுகின்ற விஷயங்கள். இனப்பிரச்சினைதான் இந்த நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடிய இணக்கத் தீர்வை நோக்கி அண்மைய எதிர்காலத்திலாவது இந்த அரசு நகரும், அத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையை இன்று வரை ஏற்படுத்துவதற்கு துளி அளவுகூட செயற்பாட்டை அவர்கள் காட்டவில்லை. இனப்பிரச்சினையை குறுக்கு வழியில் காணமுடியாது. இதுவரை காலமும் பிழையாக வழிநடத்தப்பட்ட சிங்கள மக்களை சரியாக வழிநடத்துவதற்கான முனைப்பு தங்களிடம் இருக்கிறது என்பதையாவது இந்த அரசு காட்டவேண்டும். சிங்கள மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டதால்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து தவறான விளக்கப்பாட்டை கொண்டிருக்கின்றனர். அந்த தவறான விளக்கப்பாட்டை அருகச்செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை இந்த அரசில் உள்ளவர்கள் முன்னெடுக்கவேண்டும். ஆனால், இவர்களும் போர் வெற்றிவாதம் கொண்ட சிங்கள மக்களை அதே நிலைப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகின்றனர். இலங்கைக்கு எதிரான அறிக்கையை செப்டெம்பர் வரை பிற்போட முடிந்ததை தாங்கள் செய்த சாதனையாகவே கருதுகின்றனர். இந்தச் சாதனையை தங்கள் அரசால் மாத்திரம்தான் செய்ய முடிந்திருக்கும் என சிங்கள கடும்போக்குவாதிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில்தான் இந்த அரசினர் இறங்கியிருக்கின்றனர். வீடியோ வடிவில் நேர்க்காணலை கீழ் காணலாம்.

SHARE