வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதில் முறைகேடு. உண்மை கண்டறிந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்டம் வழங்கக்கோரும் பிரேரணை வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது

299

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதில் உள்ள முறைகேடுகள் தொடர்பில் உண்மை கண்டறிந்து, தகுதியிருந்தும் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என்கிற தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் நேற்றைய அமர்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய ரவிகரன்,
ravikaran1
முல்லை மாவட்டத்தில் ஐந்து பிரதேசத்திலும் வீட்டுத்திட்டங்களை பொறுத்தவரை குறைபாடுகள் உள்ளன. இருந்தும் எனது கைகளிலுள்ள சில கிராமங்களின் புள்ளிவிபரங்களை ஆதாரத்துடன் இச்சபையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சுதந்திரபுரம் தேராவில் வள்ளிபுனம் தேவிபுரம் புதுக்குடியிருப்பு மேற்கு ஆனந்தபுரம் ஆகிய இக்கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் முற்றாகப்பாதிக்கப்பட்ட தகுதிகள் இருக்கும் குடும்பங்களுக்கு இன்று வரை வீடுகள் கிடைக்கவில்லை.
புள்ளிகள் அடிப்படையில் தகுதிகள் இருக்கும் குடும்பங்களே தேர்வு செய்யப்பட்டு வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு  வீடுகள் வழங்கப்பட்டிருந்தன..
ஆனால் நான் குறிப்பிடும் மேற்படி கிராமங்களில் 10 புள்ளிகளுக்கு மேல் 25புள்ளிகள் வரையுள்ள குடும்பங்களுக்கே வீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை. முள்ளிவாய்க்கால் உட்பட சில கிராமங்களுக்கு வீடுகள் வழங்கப்படுவதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்ற போதும் பின்பு அவைகள் வழங்கப்படவில்லை.
கடந்த வாரங்களில் முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்துமளவுக்கு நிலைமைகள் இருந்தன. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட  வீடுகள் எங்கே? வாழ்வைத்தொலைத்துவிட்ட நிலையில் இவர்களுக்குவீடுகள் வழங்கப்படாததன் காரணம் என்ன?
இறுதிப்போர் நடைபெற்றதாக சொல்லப்படும் முள்ளிவாய்க்கால்  ஆனந்தபுரம் மக்களுக்கே வீடுகள் வழங்கப்படவில்லை. இவ்விடயத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவே கருதுகின்றேன்.
நான் இங்கே குறிப்பிட்டுள்ள கிராமங்களிலுள்ள குடும்பங்களின் புள்ளிவிபரங்கள் உள்ளிட்ட விபரங்கள் யாவும் ஆதாரமாக எனது கைகளிலேயே உள்ளன.
இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என மரியாதைக்குரிய நீதியரசர் கௌரவ முதலமைச்சர் அவர்களிடம் அம்மக்கள் சார்பாக கோருகின்றேன்.
பிரேரணை
 முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது.உண்மையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுதிகள் இருந்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் வீட்டுத்திட்டங்கள் கிடைக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலர் பிரிவிலும் இக்குறைபாடுகள் உள்ளன. மேற்படி முறைகேடுகள் கண்டறியப்படவேண்டும். உண்மையாக  பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கவேண்டும். இதற்குரிய நடவடிக்கையை கௌரவ முதலமைச்சர் அவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் என இச்சபை கோருகின்றது.
SHARE