வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் நியூசிலாந்து

433
மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 508 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வில்லியம்சன் 113 ரன்களும், ஜிம்மி நீசம் 107 ரன்களும் விளாசினர். துவக்க வீரர் டாம் லதாம் 83 ரன்களும், விக்கெட் கீப்பர் வாட்லிங் 89 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுலைமான் பென், ஷில்லிங்போர்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், விக்கெட்டைக் காப்பாற்ற போராடியது. எட்வர்ஸ், பிராவோ, சாமுவேல்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆகினர். துவக்க வீரர் கெயில் கடுமையாக போராடி 64 ரன்கள் அடித்தார். பாவெல் 28 ரன்களும், ராம்தின் 39 ரன்களும் சேர்த்தனர். சந்தர்பால் 84 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார்.

இதனால் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்குள் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் சவுத்தி, கிரேக் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 246 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். முதல் ஓவரில் புல்டான் டக் அவுட் ஆனார். பின்னர் 7 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் (2) விக்கெட்டை இழந்தார். இதனால் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. 260 ரன்கள் முன்னிலையுடன் 4-ம் நாள் ஆட்டத்தை நியூசிலாந்து தொடர உள்ளது.

SHARE