ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க உத்தேசித்துள்ளது என ஊடகங்களில் வெளியான செய்தியால் மஹிந்த அரசு அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கும் மஹிந்த அரசின் முக்கிய அமைச்சர்களுக்கும் இடையிலான அவசர சந்திப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பை கண்டியில் நேற்று நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பில் மு.காவின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதிப்படுத்தினார். இன்று அலரி மாளிகையில் நடக்கும் சந்திப்பில் மு.காவை தம் வசம் வைத்திருக்க, அக்கட்சியினால் முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான பதில்களை மஹிந்த அரசு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள ஒரு சிலரும் பிராந்திய சபையின் உறுப்பினர்கள் சிலரும் மஹிந்த அரசுக்கு ஆதரவாக மிக இரகசியமான முறையில் செயற்பட்டு வருவதன் எதிரொலியாகவே மு.காவின் தலைமை இறுதி முடிவை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த நிலையில் அரசுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இருக்கிறாராம். ஆனால் சில உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளிக்க வேண்டும் என ஹக்கீமைத் தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றனராம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.