ஹசரங்காவின் மாயாஜாலத்தில் காலியான ஆப்கான்! ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

20

 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்றது.

பல்லேகலவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. நிசங்க 18 ஓட்டங்களிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து கைகோர்த்த சமரவிக்ரமா (52), குசால் மெண்டிஸ் (61) அரைசதம் விளாசினர். இந்தக் கூட்டணி 103 ஓட்டங்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து சரித் அசலங்கா அதிரடியில் மிரட்ட, ஜனித் லியானகே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இதன்மூலம் இலங்கை அணி 308 ஓட்டங்கள் குவித்தது. அசலங்கா ஆட்டமிழக்காமல் 97 (74) ஓட்டங்களும், லியானகே 50 (48) ஓட்டங்களும் எடுத்தனர். அஸ்மதுல்லா ஓமர்சாய் 3 விக்கெட்டுகளும், நூர் அகமது, கியாஸ் அகமது மற்றும் பரூக்கி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் என்ற நல்ல நிலையில் இருந்தது. தொடக்க வீரர் ஜட்ரான் 54 (76) ஓட்டங்களிலும், ரஹ்மத் ஷா 63 (69) ஓட்டங்களிலும் அவுட் ஆகினர்.

அடுத்து ஹசரங்காவின் மாயாஜால சுழலில் சிக்கி, ஆப்கானிஸ்தான் அணி அடுத்த 10 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணி 33.5 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை இமாலய வெற்றி பெற்றது. ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ மற்றும் தில்ஷன் மதுஷன்கா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

SHARE