ஐ.எஸ்.ஐ.எஸ் கை ஓங்குகிறது! உயிருக்கு அஞ்சி அகதிகளாகும் மக்கள்

408

 

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கி வரும் நிலையில் குர்து இன மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்கள்.இந்த தீவிரவாதிகள் சிரியாவின் வடக்கு பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி, முன்னேறி வருகிறார்கள். அவர்கள் துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களை கைப்பற்றி உள்ளனர்.

அடுத்த கட்டமாக அவர்கள் எல்லை நகரமான கொபானி என்று அழைக்கப்படுகிற அய்ன் அல் அரப் நகரின் மீதும் தாக்குதல் தொடுத்து கைப்பற்றும் நிலை உள்ளது.

இது அந்தப் பகுதியில் வாழ்கிற குர்து இன மக்களின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துள்ளது, துருக்கி எல்லைப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கி வருகிற நிலையில், உயிருக்கு பயந்து, அங்கு வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு, நேற்று முன்தினம் ஒரே நாளில் குடும்பம், குடும்பமாக துருக்கியில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதுதொடர்பாக துருக்கியின் துணைப்பிரதமர் நுமன் குர்துல்மஸ் கூறுகையில், எல்லையில் அக்ககாலேயில் இருந்து முர்சிட்பினார் வரையில் 8 நுழைவாயில்களை சிரியாவின் குர்து இன மக்கள் வருவதற்கு வசதியாக திறந்து வைத்துள்ளோம். ஒரே நாளில் 45 ஆயிரம் குர்து இன மக்கள் சிரியாவில் இருந்து இங்கு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

 

SHARE