பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அகதி தஞ்சம் கோரி படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்கின்றனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தது.
இந்த காலப்பகுதியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்தனர். எனினும், 2014ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தது.
இதனைத்தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எந்த நாட்டில் இருந்து வந்தாலும் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குள்ளும், அவர்களது படகுகள் அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் அகதி தஞ்சம் கோரிய நிலையில், அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் அகதிகள் தமது சொந்த நாடுகளுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ சென்று குடியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.