தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப மக்கள் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் இன்று (18.7) தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வெள்ளையர்களின் சாம்ராஜ்ஜியத்தின் பின்னர் எமது நாடு சுதந்திரமாடைந்த போதிலும் தமிழர்கள் அடிமைசாசனத்திற்குள் தள்ளப்பட்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே தமிழர் விடுதலைக்காக சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான அகிம்சை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவிலேயே ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டது.
உண்மையில் எமது தமிழனம் விரும்பி ஆயுதப்போராட்டத்தை கையில் எடுக்கவில்லை. அந்த ஆயுதப்போராட்டமும் முள்ளிவாய்காலுடன் மௌனிக்கப்பட்ட நிலையில் எமது மக்கள் வஞ்சகத்தனமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
காலத்திற்கு காலம் எமது தமிழ் தலைமைகள் பேரினவாத சிங்கள அரசுகளால் ஏமாற்றப்பட்டு வந்தது வெளிப்படையான உண்மை. இன்று ஐ.நா. சபையின் ஆணையாளர் மற்றும் மகிந்த ராஜபக்ச அரசு ஒன்றிணைந்து இந்த மக்களுக்கு பொய் வாக்குறுதியை வழங்கியிருந்தது. அதாவது நாம் 13 ஆவது திருத்தத்திற்கு மேலால் சென்று தமிழர்களின் பிரச்சனைகளை பூரணமாக தீர்ப்பேன் என்பதாக கூறியது. ஆனால் வார்த்தை அளவில் அதுவும் பொய்ப்பித்து இன்று தமிழர்களின் பிரச்சனை ஐ.நா சபை வரை கொண்டு செல்லப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையிலேயே நாம் பாராளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம்.
இந் நிலையில் தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசக்கூடிய தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு செல்லாது விடத்து எமது பிரச்சனைகள் மறைக்கப்பட்டு மீண்டும் தமிழர்களுக்கு என அடிமை சாசனம் எழுதப்பட்டு விடும் என்பதே உண்மை.
கடந்த ராஜபக்ச அரசில் வெளிப்படையான உரிமை மீறல்கள் நடைபெற்ற போது நாம் மைத்திரியை கொண்டு வந்ததன் பின்னர் வெளிப்படையான உரிமை மீறல்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதனை சிறிதளவில் ஏற்றுக்கொள்ளலாம்.
இந் நிலையில் இன அடக்குமுறையானது அமைதியான முறையில் இடம்பெறுவதுடன் அவர்களது கொள்கையில் மாற்றமில்லை என்பதே எனது கருத்தாகவுள்ளது.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினரானதன் பின்னர் கிடைக்கின்ற சிறப்புரிமையையும் பயன்படுத்தி மேலும் மக்கள் போராட்டங்களை வலுபடுத்தி எமது உரிமைகளுக்காக குரல்கொடுப்பேன். அதற்கு சாட்சியாகவே புதுக்குடியிருப்பில் இரு ஆர்ப்பாட்டஙகைள நடத்தி இராணுவத்தை திக்குமுக்காட செய்திருந்தோம்.
இதேவேளை எமது காணிப்பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. காணாமல்போனோர் தொடர்பான விடங்கள் வெளிப்படுத்தப்படவேண்டும். எமது மக்களின் வாழ்வாதார பிரச்சனைகயில் விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.
இந் நிலையில் நாம் அடுத்து அகிம்சை போராட்டத்திற்கு மக்களை திரட்டி தயார்ப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில் தொடர்ந்தும் சர்வதேசமும் ஐ.நா. சபையும் எமக்காக குரல்கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்று கூறமுடியாது. எனவே நாம் அவ் விடயங்களை முன்னிலைப்படுத்தி கொண்டு செல்வதன் மூலம் மீண்டும் நாம் சர்வதேசத்தின் கவனத்திற்கும் அவர்களின் காதுகளுக்கும் எமது பிரச்சனைகளை கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.