அகில இலங்கை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவிக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது. தேவதாஸ் டென்சிகா என்ற மாணவிக்கு இரத்தினபுரம் சிவசித்திவிநாயகர் ஆலயத்தின் தீர்த்த உற்சவ நாளான நேற்று மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.இரத்தினபுரத்தை சேர்ந்தவரும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்க செயலாளருமான பொன்.காந்தன் தலைமையில் சிவசித்தி விநாயகர் ஆலய பரியாலன சபையினரின் அனுசரணையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஆலயத்திருவிழாவில் சிவாச்சாரியார்கள் ஆலயத்தின் மூத்த தொண்டர்கள் மதிப்பளிக்கப்பட்ட பின் சாதனை படைத்த டென்சிகா அனைவரின் ஆசியுடன் மதிப்பளிக்கப்பட்டார். டென்சிகாவிற்கு கிளிநொச்சி இரத்தினபுரத்தை பொன்.காந்தனின் பெற்றோர்களான அமரர்கள் குணரத்தினம் சரஸ்வதி ஆகியோரின் ஞாபகார்த்த பதக்கத்தையும் விருதையும் கரைச்சி பிரதேச சபை உபதவிசாளர் நகுலேஸ்வரன் கிரிக்கெட் சபையின் தலைவர் சௌந்தரராசா ஆகியோர் வழங்கி வைத்தனர். அடுத்து இரத்தினபுரம் மக்கள் சார்பான மதிப்பளிப்பை கில்பேட் வழங்கி வைத்ததுடன் ஆலய பரிபாலன சபையால் வாழ்த்துப்பா ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து டென்சிகாவின் பயிற்சியாளர் நடராஜலிங்கம் முகுந்தன் ஆனந்தபுரம் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருமான ரஜனிகாந்தால் பொன்னாடை போர்த்தி அன்பளிப்பு வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். இந்த நிகழ்வுகளில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தை சேர்ந்த ஜீவநாயகம் எடிசன் தனியார் கல்லூரி இயக்குனர் சுதன் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுகந்தன் கிராமத்தின் முன்னோடிகள் கலந்து கொண்டனர். |