அக்குறணை பிரதேச சபை எல்லையில் குப்பைகளை சேகரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஐ.எம். இஸ்திஹார் தெரிவித்தார்.
அலவத்துகொடையில் அமைந்துள்ள பிரதேச சபை அலுவலகத்தில் இடம் பெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
அலவத்துகொடை யால்காமம் பிரதேசத்தில் அக்குறணை பிரதேச சபை நடாத்தி வரும் கொம்போஸ்ட் தயாரிக்கும் நிலையத்திற்கு அப் பிரதேச மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருவதன் காரணமாக குப்பைகளை கொட்டுவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் குப்பைகளை சேகரிப்பதை தற்போது தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக மேற்படி சந்திப்பின் போது கூறினார்’.
கொம்போஸ்ட் தயாரிக்கும் மேற்படி இடம் காரணமாக அப் பிரதேச மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதை தான் உணர்ந்துள்ளதாக தெரிவித்த தலைவர் இந் நிலையத்தை மூடி விடுவதற்கு தனக்கு பூரண அதிகாரம் இருப்பின் அதனை மூடி விடுவிடவும் பின் நிற்க மாட்டேன் எனத் தெரிவித்தார்
இருந்த போதும் இதனை மூடுவதற்கு தனக்கு எதுவித அதிகாரம் இல்லாததால் ஜனாதிபதிக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதியிடமிருந்து அனுமதி கிடைத்தால் தான் இதனை மூடிவிட்டு இப் பிரதேச மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.