அதிரடி ஆட்டக்காரரும் அதே சமயத்தில்ஆக்ரோஷ ஆட்டக்காரருமான கோஹ்லி இந்த ஐபிஎல் போட்டியில் வானவேடிக்கையால் ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறார்.
அப்படி என்ன செய்தார் கோஹ்லி?
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோஹ்லியின்ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 4,002 ஆக (136 ஆட்டம்) உயர்ந்துள்ளது.
- இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 4 ஆயிரம் ரன் மைல்கல்லை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- 9-வது ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பாக அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் கோஹ்லி 4-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்த சீசனில் 13 ஆட்டங்களில் ஆடி4 சதம், 5 அரைசதம் உள்பட 865 ரன்கள் (சராசரி 86.50) சேர்த்துள்ளார். ஒரு ஐ.பி.எல்.தொடரில் 800 ரன்களை கடந்த முதல் வீரரும் இவர் தான்.
- முதல் 8 ஐ.பி.எல். தொடர்களில் ஒரு சதம் கூட எடுக்காத விராட் கோலி, தற்போதைய 9-வது ஐ.பி.எல். போட்டியில் மட்டும்4 சதங்கள் எடுத்து வியக்க வைத்துள்ளார்.
- இதன் மூலம் 20 ஓவர் போட்டி வரலாற்றில் ஒரு தொடரில்4 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இங்கிலாந்தில் நடந்து வரும் நாட்வெஸ்ட் பிளாஸ்ட் 20 ஓவர் போட்டியில் 2015-ம் ஆண்டில் மைக்கேல் கிளைஞ்சர் (அவுஸ்திரேலியா) 3 சதங்கள் எடுத்ததே இதற்கு முன்பு அதிகபட்சமாக இருந்தது.
- ஐ.பி.எல். போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெய்லுக்கு (5 சதம்) அடுத்த இடத்தில் கோஹ்லி இருக்கிறார்.
- ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மட்டும் விராட் கோஹ்லி இதுவரை 2,042 ரன்கள் (65 ஆட்டம்)திரட்டியிருக்கிறார். 20 ஓவர் போட்டியில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற மகிமையை வசப்படுத்தியிருக்கிறார்.
- முதல் 3 சதங்களை முறையே 63,56, 53 பந்துகளில் ருசித்த விராட் கோஹ்லி இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் அடைந்து அசத்தினார்.
- ஐ.பி.எல். போட்டியில் அதிவேகமாக சதம் கண்ட அணித்தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது. 2011-ம் ஆண்டு டெக்கானுக்கு எதிராக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இறங்கிய ஷேவாக் 48 பந்துகளில் சதம் விளாசியதே அணித்தலைவராக ஒரு வீரரின் மின்னல் வேக சதமாக இருந்தது.