நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை சில வகை உணவுகள் அடிக்கடி உண்பதன் மூலம் அதிகரிக்கப்படுவதால், முடக்குவாதம் உண்டாகும் ஆபத்து அதிகம் ஏற்படும்.
யூரிக் அமிலத்தின் அளவை, நமது உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே, யூரிக் அமில அளவை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இங்கு காண்போம்.
மட்டி மீன்
உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்தால், மட்டி மீனை மிகக் குறைந்த அளவே உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகப்படுத்தும் தன்மை இந்த மீனில் உள்ளது.
இதேபோல் நண்டு, இறால், சிப்பிகள், சிப்பியினம் போன்றவற்றிலும் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது.
சிவப்பு இறைச்சி
பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவை யூரிக் அமில அளவை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றில் உள்ள ப்யுரின் நமது உடலில் யூரிக்கின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, இவற்றை மிகக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
பயறு வகைகள்
பயறு வகைகளான பருப்பு, கொண்டக்கடலை, பீன்ஸ் போன்றவற்றில் ப்யுரின் அளவு அதிகமாக உள்ளது. எனவே, இவை யூரிக் அமில அளவை அதிகப்படுத்தும் என்பதால், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம், யூரிக் அமிலத்தின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சில வகை காய்கறிகள்
அஸ்பரகஸ், காளான், காலிஃப்ளவர், கீரை, முள்ளங்கி போன்ற காய்கறிகளில் ப்யுரின் உள்ளது. எனவே, இவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை பானங்கள் மற்றும் இனிப்புகள்
குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளில் கார்ன் சிரப் சேர்க்கப்படுகிறது. இது யூரிக் அமில உற்பத்தியை ஊக்குவிக்கும் பணியை தூண்டும். எனவே இவற்றை மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் கேக், பிஸ்கட்டுகள், மாவு உணவுகள் ஆகியவற்றில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுவதால் இவற்றை தவிர்ப்பதன் மூலம் யூரிக் அமில அளவு அதிகரிப்பதை தடுக்கலாம்.
காபி
உடலில் யூரிக் அமில அளவு அதிகம் உள்ளவர்கள், தினமும் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் காபி குடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது.
மதுபானங்கள்
பீர் போன்ற மதுபானங்களில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகப்படுத்தும் தன்மை அதிகம் உள்ளது. இவை உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிப்பதுடன், அவற்றை வெளியேற்ற விடாமலும் தடுக்கின்றன.
மதுபானங்கள் மாட்டிறைச்சியை விட அதிகளவு தீங்கை உண்டாக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.