அடுத்த சந்ததிக்கு அழகான நகராக ஏறாவூரை ஒப்படைக்க வேண்டும் – அலிஸாஹிர் மௌலானா

276

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழும் ஏறாவூர் மண்ணை அடுத்த சந்ததிக்கு அழகான நகரமாக நாம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரப் பகுதியை அகலமாக்கும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் சந்தைப்படுத்துதலுக்கான பிரதான நகரமாகத்தான் ஏறாவூர் நகரம் இருந்து வந்திருக்கின்றது.

கல்வி பொருளாதார அபிவிருத்தி அத்தனையும் எல்லா மக்களுக்கும் அனுகூலமாக அமையக் கூடியதாக நன்கு திட்டமிடப்பட வேண்டும். அது இயற்கைச் சூழலுக்கும் இசைந்து கொடுக்கக் கூடியதாக அமைக்க வேண்டும்.

நகரத்தை உடைத்து அகலமாக்குவதால் வர்த்தகர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் ஏற்படக்கூடிய இழப்புக்களையும், அசௌகரியங்களையும் மனிதாபிமானத்துடன் அணுகி இந்த அபிவிருத்திகளை அனைவரினதும் பூரண ஒத்துழைப்புடனும் செய்ய வேண்டும்.

இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதால் கடை மற்றும் வீட்டுரிமையாளர்களுக்கு ஏற்படக் கூடிய நஷ்டங்களுக்கும் இழப்பீடுகள் இல்லை.

அபிவிருத்திக்குத் தடையாக நீதிமன்றம் சென்றாலும் அது கைகூடாத நிலைமைகள் உள்ளன.

நடுத்தெருவிலிருந்து இருமருங்கும் 11.5 மீற்றர் உடையதாக ஏறாவூர் நகர கடைத்தெரு அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலை அகலமாக்கும் வேலைத் திட்டத்திற்காக நகர அபிவிருத்தி நீர் விநியோக அமைச்சு 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

வீதி விபத்துக்களற்ற இயற்கை எழில் நிறைந்த சௌகரியமான, பாதுகாப்பும் சுகாதாரமும் கொண்ட நகரத்தை அமைப்பதற்கு வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும். எனமேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினரும், மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சருமான எம்.எஸ். சுபைர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைப் பொறியாளர் ரீ. பத்மராஜா உட்பட பிரதான கடைத்தெரு வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், ஏறாவூர் நகர சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

SHARE