கடந்த 07, 08, 09ம் திகதிகளில் மலேசியாவின் பினாங் மாநில துணை முதல்வரின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டின் கருப்பொருள் தமிழர்களினுடைய இன அடையாளம் அழிக்கப்பட்டமை தொடர்பானதாகும். இம் மாநாட்டில் உலகெங்கிலும் வாழக்கூடிய எமது தமிழ் உறவுகள் கலந்துகொண்டிருந்தார்கள். எங்களுடைய இன அடையாளத்தினை நாங்கள் எவ்வாறு பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதும் எவ்வாறு அதனை வெளிப்படுத்தவேண்டும் என்பது பற்றியும் ஆராய்ந்திருந்தார்கள்.
அவர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையில் கொண்டிருந்த இனப்பற்றும், அக்கறையும், ஆர்வமும் எங்களை மகிழ்ச்சியடையச் செய்திருந்தது. தமிழ் மக்கள் எவ்வாறு ஒற்றுமையாக கூடி எமது நியாயமான தீர்மானங்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. உண்மையில் இந்நிகழ்வு உலகில் வாழக்கூடிய அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டு வாழக்கூடியவர்களின் கருத்தாகவும் அமையப்பெற்றது.
இம்மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து கலந்துகொள்வதற்காக வைகோ அவர்களும் வருகைதந்திருந்தார். குறிப்பாக இந்தியாவிலிருக்கக்கூடிய தமிழர்கள் ஈழத்தமிழர்களின் மீது கொண்டுள்ள அக்கறையும், அவர்களுடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகளும், தொடர்ந்தும் அவர்கள் எமக்காக குரல்கொடுக்கும் ஆற்றலும் எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 58 நாடுகளில் இருக்கக்கூடிய உறவுகள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களினுடைய பிரச்சினையையும் அவர்கள் அறிந்துகொண்டு சென்றிருக்கின்றார்கள். ஈழத்தமிழர்கள் விடயத்தில் எங்களுக்கான முழு ஆதரவினையும் வழங்குவதாகவே கூறிச்சென்றிருக்கின்றார்கள்.
அந்த மாநாட்டில் நான் ஈழத்தினுடைய பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்திருந்தேன். யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் பெண்களின் வாழ்க்கை நிலை என்ன? தற்பொழுது அவர்களுடைய பிரச்சினைகள் என்ன என்பதையும் குறிப்பாக எமது மலையக உறவுகளின் நிலை என்ன? அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உரையாற்றியிருந்தேன். மேலும் காணாமற்போனாரின் உறவுகள் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், முகங்கொடுக்கின்ற சவால்கள் போன்ற விடயங்களை தெளிவாகக் கூறியிருந்தேன். அவர்கள் எங்களுக்கு ஆதரவினை வழங்குவதாகவும் கூறியிருந்தார்கள்.
இறுதியாக உலகில் வாழக்கூடிய தமிழர்கள் இன அடையாளத்தினை எவ்வாறு தக்கவைப்பது பற்றியும், இந்திய மீனவர்களின் கைதுகள் தொடர்பிலும், வடகிழக்கில் தமிழர்களின் நில அபகரிப்புக்கள் மற்றும் இராணுவத்தினரின் அதிகரிப்புக்கள் மட்டுமல்ல வடகிழக்கில் சிங்கள மக்களின் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்ற தீர்மானமும் உட்பட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. அத்தோடு உலக தமிழர் செயலகமும் பினாங் மாநிலத்திலே நிறுவப்படவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. உலகத் தமிழர்களின் ஒற்றுமையும், அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விடயம் அங்கு முன்னிலைப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.