“அட்சயதிருதியை” இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் மேலும் தங்கம் சேரும் என்று ஒரு நம்பிக்கை உண்டு.
ஆனால் உண்மையில் அட்சயதிருதியை என்றால் என்ன? அந்த தினத்தில் என்ன செய்ய வேண்டும்? ஏன் அட்சயதிருதியை கொண்டாடப்படுகின்றது பற்றி இந்து சமயத்தில் பல கருத்துகள் கூறப்படுகின்றன.
இதன்படி, முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சயதிருதியை என்றும், பரசுராமரின் பிறந்த நாளாகவும் அட்சயதிருதியை கொண்டாடப்படுவதாகவும், கூறப்படுகின்றது.
மேலும், இதிகாசங்களின்படி, அட்சயதிருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.
சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
வேதங்களில் கூறப்பட்டிருப்பதாவது,
யசூர் வேதத்தில் எந்த நாட்களில் எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும், வளர்ச்சி அடையும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள், மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுவாக தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரிசிதான் முனை முறியாத அரிசி. அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.
மஞ்சள்,
மஞ்சளில் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள்தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. இவற்றை வாங்கலாம் என வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும்?
அன்றைக்கு அன்னதானம் செய்யுங்கள், வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தவிர, அட்சயதிருதியை அன்றைக்கு திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும். அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்துதானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம்தானே. அதாவது மந்திரங்கள், வேதங்கள் படிப்பவர்களை மதித்து தானம் தருவது.
தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளியும் வாங்கலாம், அதில் ஒன்றும் தவறு இல்லை. பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகிறது. அதற்குப் பிறகுதான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்கினால்தான் நல்லது என்பது தவறு. அதற்குப் பதிலாக முனை முறியாத பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருட்களெல்லாம் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அட்சயதிருதியையின் போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்
வருடப்பிறப்பு திதியாக இருந்தால், மதிக்கத்தக்க செயல்களான பாராயணம், தவம், கொடைகள், சடங்கு ரீதியான முழுக்கு, தியாகங்கள், வேள்விசெய்தல் ஆகியன மிகவும் நன்மையளிப்பதாகும்.
ஆனால் முப்புரிநூல் அணிதல், திருமணம், நோன்பு முடித்தல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல், கடும் உழைப்பு மற்றும் நடவு நடுதல் போன்ற செயல்களை செய்வது சில சமூகங்களில் தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்து மதத்தின் நல்ல நேரம் பார்க்கும் சோதிட சாத்திரத்தின் நேரத்துடன் பொருந்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் கோள்களின் நகர்வும் அது போன்ற அம்சங்களும் செயலைச் செய்பவருக்கு சாதகமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுபவர்கள் இந்தத் திதியை குருட்டுத்தனமாக அனைத்து விதமான வாழ்வு-செயற்பாடுகளைத் துவக்கவும் நடத்தவும் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர்.
குறிப்பிட்ட நடவடிக்கைக்கான திதிகளின் மங்களாம்சமானது அதே நேரத்தில் நிகழும் பஞ்சாங்க சுத்தி, முழுத்த யோகங்கள் மற்றும் இதர இந்து நல்ல நேரம் பார்க்கும் சோதிடக் கூறுகளின் இருத்தலையும் சார்ந்துள்ளது.
இந்த நாளில் புதிய செயலைத் துவங்குவது அல்லது விலை மதிப்பற்றவைகளை வாங்குவது நன்மையையும் வெற்றியையும் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த நாளில் பரிசுப் பொருட்கள் அளிப்பதன் மூலம் கிடைக்கும் மதமுறையிலான புண்ணியமானது பன்மடங்காகப் பெருகும் எனக் கருதப்படுகிறது.