100 வருடங்களாக கழிவுகளைக் கொட்டுவதற்கு நிரந்தர இடம் இல்லாமல் இருந்த அட்டன் டிக்கோயா நகர சபை பிரதேசத்திற்கு நிரந்தர இடமொன்றைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குப்பைகளை மீள் சுழற்சிக்குட்படுத்தி கூட்டுப்பசளை தயாரிக்கும் திட்டத்தை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அட்டன் டைனிங் விருந்தகத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அட்டன் டிக்கொயா நகரசபையின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத்தெரிவித்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் குடோயா பகுதியில் காணப்படும் குப்பைகள் கொட்டும் இடத்தை 100 வருடங்களாகப் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு 6 தொன் குப்பை மூடைகள் சேருகின்றன. இங்கு குப்பைகள் கொட்டுவதனால் சுற்றாடலுக்கும், பொதுமக்களுக்கும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்;படுகின்றன. இதுவரைகாலமும் இருந்த அட்டன் டிக்கோயா நகரசபைத் தலைவர் குப்பை கொட்டுவதற்காக வேறொரு இடத்தைத் தெரிவுசெய்ய முற்பட்டபோதும் அது சாத்தியப்படவில்லை. அரசியல் தலைமைகள் முறையாக நடவடிக்கை எடுக்காமையினால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் அட்டன் குடாஓயா பகுதியில் பொதுமக்கள் இல்லாத சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத இடமாக மூன்றரை ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தோட்டக் கம்பனியுடன் தொடர்புகொண்டு இந்நிலத்தை நிரந்தரமாகப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்