மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் இருந்து அதிகரித்துவரும் குற்றங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுத்து குறைப்பது போன்ற விடங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அழைப்பின்பேரில் மாவட்ட திறந்த நீதிமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர், உதவி பொலிஸ் அத்தியேட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட நீதிவான் நீதிமன்ற பதிவாளர், சட்ட உதவி வழக்கறிஞர்கள் சமூகம் சீர்திருத்த பொறுப்பதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சந்தேக நபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிறைவேற்றல் கடுமையான தண்டனைகள் மற்றும் உயர்ந்த பட்ச தண்டனைப் பணம் மூலம் குற்றங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் தொடர்பாகவும் பொலிஸார் மற்றும் நீதிமன்ற சட்டத்தரணிகள் மக்கள் தொடர்பில் சுமூகமான உறவுகளை பேணுதல் தொடர்பாகவும் காத்திரமான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது வழங்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் வருகைதந்த அதிகாரிகளினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான உரிய தீர்வுகளையும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.