அதிகாரப் பகிர்வின் அரசியல் இலங்கை முரண்பாட்டிற்கு சமரச தீர்வு காண்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாகவிருந்தது
மாகாண சபைகள் எனும் கருத்து இலங்கைக்கு புதியதொரு தோற்றப்பாடன்று. 1928 டொனமூர் ஆணைக்குழுவே முதலில் துணைத் தேசிய அரசாங்கம் என்ற வகையில் ‘மாகாண சபைகள்’ என்ற கருத்தினை அறிமுகம் செய்தது. இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், டொனமூர் ஆணைக்குழு வரையறுக்கப்பட்ட சுயாட்சி மற்றும் சர்வசன வாக்குரிமை வழங்குவதை சிபாரிசு செய்தமை மாகாண மட்டத்தில் இரண்டாம் நிலை அரசாங்கத்தைக் கொண்டிருக்கும் கருத்தை அடையாளப்படுத்தியது. இரண்டாம் நிலை அரசாங்கம் ஒன்றிணைந்த பிராந்திய அபிவிருத்திக்கு வழிசமைப்பதுடன் ஆட்சிச் செயன்முறையில் பிராந்திய இனக்குழுக்கள் பங்கேற்கச் செய்யும் என்ற கருத்தை அது கொண்டிருந்தது.
அரசாங்க சபை 1940 இல் அப்போதைய உள்ளுராட்சி அமைச்சர் எஸ்.டபிள்யு,ஆர்.டி.பண்hரநாயக்காவை (இவர் இரண்டாம் நிலை அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் மற்றும் பணிகள் தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்;ப்பித்திருந்தார்) இரண்டாம் நிலை அரசாங்கத்தை ஏற்படுத்தத் தேவையான சட்டமூலத்தை அறிமுகம் செய்யுமாறு வேண்டித் தீhமானமொன்றை நிறைவேற்றியது. இருப்பினும் அரசாங்க சபை அதிகாரப் பகிர்வின் ஆட்புலப் பிரதேச அலகாக மாகாணத்தை ஏற்றுக் கொள்வதற்குச் சார்பாக இருக்கவில்லை. பதிலாக அவர்கள் மகாhணத்தின் ஒரு உப பிரிவு என்றவகையில் மாவட்டங்களை விரும்பினர்.
அரசாங்க சபை உள்ளுர்த் தேவைகளை நெருங்குவதில் சிறிய ஆட்புலப் பிரதேச அலகு அதிகம் பயன்மிக்கதாகவிருக்கும் எனும் அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தது. அரசாங்க சபை நீண்ட வாதப் பிரதிவாதத்திற்குப் பின்னர் ‘மாவட்ட சபைகளை’ உருவாக்கும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு உள்ளுராட்சி அமைச்சரைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1947ஆம் ஆண்டு முதலாவது மந்திரி சபைக்கு அப்போதைய உள்ளுராட்சி அமைச்சர் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா நகல் பிரேரணையை சமர்ப்பித்திருந்தாலும்கூட மந்திரி சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கு அது ஒரு முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கவில்லை. எனவே அது புறந்தள்ளப்பட்டது.
சிறிய ஆட்புலப் பிரதேச அலகு எனும் கருத்து சுதந்திரத்திற்குப் பிந்திய பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனைகளின் பிரத்தியட்சமிகு பண்பாக மாறியது. 1957(பிராந்திய சபைகள்) 1967(மாவட்ட சபைகள்) மற்றும் 1980 மாவட்ட அபிவிருத்தி சபைகள். 1957இல் வட மாகாணத்திற்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்கு மாகாணத்துடன் இணைந்திருக்கும் தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களை வட மாகாணத்துடன் இணைப்பதாக வாக்குறுதி அளித்து தமிழரசுக் கட்சியுடன் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டபோது, அது தெற்கில் சர்ச்சையை உண்டு பண்ணியது.
பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசயக் கட்சி சிங்கள பௌத்த அமைப்புகளுடன் சேர்ந்து சிங்களவர்களுக்கு இழைத்த துரோகம் எனக் கூறி பாரிய எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டது. தமிழரசுக்கட்சி இடைக்கால விட்டுக் கொடுப்பு என அதனை அழைத்து, பிராந்திய சபைiயை ஏற்றுக்கொள்ள அதன் சிறப்புக் கட்சி மாநாட்டில் தீர்மானமொன்றை நிறைவேற்றினாலும்கூட, எதிர்க்கட்சி நகல் சட்டமூலத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிடச் செய்ய பிரதமரை நிர்ப்பந்தித்தது.
1957இற்குப் பின்னர், அதிகாரப் பகிர்வின் அலகாக மாவட்டத்தை இனங்காணல் அரசாங்கங்களின் உள்நோக்கம் கொண்ட செயற்பாடாக மாறியது. ஆளும் தiலைமைத்துவம் 1967இல் மாவட்ட சபைகளுக்கூடாக பிராந்திய அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது. அத்துடன் 1980இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்படுத்தும் சட்டவாக்க நடவடிக்கைகளையும் எடுத்தது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் மாவட்டமே அதிகாரப் பகிர்வின் ஆட்புலப் பிரதேச அலகாக அரசாங்கங்களினால் ஏற்கப்பட்டது. இம்முன்மொழிவுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமழர்களின் பாரம்பரியத் தாயகம் எனும் தமிழ்த் தேசியவாத கோரிக்கைக்கு அரசியல் மற்றும் நிர்வாகப் புறவமைப்பினை மாகாணம் வழங்கும் என்னும் சிங்கள தேசியவாதத்துடன் உடன்படுவதாகவிருந்தன.
13ஆம் திருத்தம் மாகாணத்தை அதன் அதிகாரப் பகிர்வின் அலகாக ஏற்றுக்கொண்டு அதன் ஆரம்ப ஆட்புலப் பிரதேச அலகுக்கு மீண்டும் சென்றது. மாவட்டத்திலிருந்து மாகாணமாக ஆட்புலப் பிரதேச அலகு முன்னேறியமை 1983-87 காலப் பகுதியில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழர்களின் தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான முரண்பாட்டில் தன்னையொரு மத்தியஸ்தராக ஆக்கிக் கொண்ட இந்தியாவிடமிருந்து வந்த பாரிய அழுத்தத்தின் பின்னர், மாகாணம் மற்றும் இரு மாகாணங்களின் இணைப்பு ஆகிய இரண்டை ஏற்குமாறு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது.
இலங்கை முரண்பாட்டில் இந்தியா வெறுமனே ஒரு மத்தியஸ்தராக மட்டுமன்றி, இலங்கையுடன் ராணுவ மோதலில் ஈடுபட்டிருந்த தமிழ் தீவிரவாதக் குழுக்களை (உண்மையில் இது இந்தியா சார்பாக இடம்பெற்ற நிழல் யுத்தம்) உருவாக்கியவர் என்ற வகையிலும் இந்தியா அதற்குள் உள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் 13ஆம் திருத்தம் பிராந்தியப் பாதுகாப்பு முகாமையாளர் பாத்திரத்தை இந்தியா வகிக்க வந்த ஒரு புவிசார் அரசியல் சூழலின் விளைவாகும். இலங்கையின் உள்நாட்டுக் காரணிகளின்றி இலங்கையின் மிகப்பெரிய அயல் நாடான இந்தியாவின் தேசிய நலன் இலங்கை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக மாறிய மாகாண சபை எனும் கருத்தினை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியது.
இலங்கைத் தமிழ் அரசியல் இயக்கம் பிரிந்து செல்லல் அல்லது அடக்குதலுக்கு உட்படுதல் இந்தியாவுக்கு ஏற்புடையதன்று. மாறாக இலங்கை முரண்பாட்டிற்கு சமரச தீர்வு காண்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாகவிருந்தது. இது இன்று இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் பலமான அம்சமாக மாறியுள்ளது. இன்றும்கூட இந்தியக் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை 2009இல் போரின் முடிவு ஒட்டுமொத்த புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தை அகற்றினாலும் 13ஆம் திருத்தத்தைப் பலப்படுத்துவதன் மூலமே இன முரண்பாட்டிலிருந்து விடுபட முடியும் எனக் கருதுகின்றனர். மறுபுறம் இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடரும் உள்நாட்டு அரசியலைத் தந்திரமாகக் கையாளும் இந்தியாவின் செயற்பாட்டுக்கெதிரான அரசியல் எதிர்ப்பு 1987இல் தோற்றம் பெற்றது. இதனை அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் 13ஆம் திருத்தத்தை அமுல்படுது;துவதில் காட்டும் அக்கறையின்மையிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும்.
கடந்த காலத்தில் மாகாண சபைகள் அறு வருடங்களுக்கான முன்மொழிவிற்கு விருப்பமின்றி உடன்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கத்துடன் பணிபுரிய வேண்டியிருந்தது. இருந்தாலும் மாகாண சபைகள் 16 வருடங்களுக்கும் மேலாக மாகாண சபையினை எதிர்த்த ஸ்ரீலங்கை சுதந்திரக் கட்சியுடன் பணியாற்ற வேண்டியிருந்தது. ஐ.தே.க. ஆழமான பிளவுகளை ஆரம்பத்தில் இந்தியாவை வரவழைப்பதிலும் பின்னர் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதிலும் கொண்டிருந்தது. 1989இலும் பதவிக்கு வந்த ஜனாதிபதி பிரேமதாச இந்திய அமைதி காக்கும் படையைத் திருப்பி அனுப்பியதுடன் மாவட்ட செயலகங்களின் தலைமையிலுள்ள உள்ளுர் நிர்வாகத்தை மாகாண சபைகளுக்கு ஒப்படைக்கும் தீர்மானத்தையும் மாற்றியமைத்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13ஆம் திருத்தத்திற்கு எதிராக அரசியல் எதிர்ப்பிற்குத் தலைமை வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1994 தொடக்கம் மத்திய அரசைக் கட்டுப்படுத்தி வருகின்றது. 13ஆம் திருத்தத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்குப் பதில் இவிவிரு அரசாங்கங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களை மீள மத்தியமயப்படுத்துவதில் ஈடுபட்டன. அவர்கள் மத்திய பணிக்குழுவாட்சி மாகாண சபைகளின் சட்ட நிதி மற்றும் நிர்வாகத் திறன்களைக் கட்டுப்படுத்தியபோது அதனை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பவர்களாக மாறினர். அதன் காரணம் இலங்கை மக்கள் பிராந்திய சமூகங்களுக்கு சேiவாயற்றுகின்றதும் திட்டமிட்ட பிராந்திய அபிவிருத்தியைக் கவனிக்கின்றதுமான உப தேசிய அரசாங்கங்களைக் கொண்டிருப்பதன் பலாபலனைப் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை.
. தற்போது பதவிக்கு வந்துள்ள வட மாகாண சபையை, முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். வாக்குகளை அள்ளிக்கொள்ளும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் தமக்குள்ளே முரண்படான வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள். பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னரும் ஒட்டுமொத்தமாக ஒரே கருத்தை வெளிப்படுத்தக்கூடிய திறன் இந்த மாகாணசபையிடம் இல்லை. இனி என்ன நடக்கும்? எப்படியிருந்தபோதிலும் மீண்டும் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதை இலங்கையில் வாழும் சாதாரண குடிமக்கள் எவரும் விரும்பவில்லை என்பதே யதார்த்தம்.
TPNNEWS