வடக்கின் பொருளாதார வலயம் வவுனியா நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்குள் தான் அமையவேண்டும் என்று நிபந்தனை விதிக்க மத்திய அரசிற்கு அருகதையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்துள்ளார். தமிழ்மக்களின் முக்கிய அபிவிருத்திப் பணி தொடர்பில் தாங்களே தீர்மானமெடுத்துவிட்டு தமிழ்மக்களிடம் திணிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் வழங்கியதெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலில் இழுபறிகள் இருந்தாலும், பின்னர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி இதற்கொரு முடிவு காணப்பட்டு விட்டது. அது பேய் உலாவும் இடமாக இருந்தால் என்ன பிசாசு உலாவும் இடமாக இருந்தால் என்ன? வடக்கின் பொருளாதார மையம் வடக்கின் மத்தியில் தான் அமைய வேண்டும்.
அது ஓமந்தை அல்லது மாங்குளத்தில் அமைந்தால் தான் தமிழ்மக்களுக்கு நன்மை அளிக்கும். குறுகிய நோக்கிலும், அரசியல் ஆதாயத்திற்காகச் சிந்திப்பவர்களால் தான் தமிழினம் இன்று பாரிய இன்னல்களை எதிர்கொண்டு உள்ளது.
வடக்கின் பொருளாதார வலயம் எங்கு அமையவேண்டும் என்பதனை அனுராதபுரத்தில் இருந்து வந்த ஒருவர் தீர்மானிப்பதனை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது.
இதனை தீர்மானிப்பதற்கு தமிழ்மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள். முக்கியமாக வடமாகாண சபை இருக்கின்றது. இவை எல்லாவற்றையும் தாண்டி மத்திய அரசின் பொறுப்புள்ளவர்கள் நிபந்தனைகள் விதிப்பதனை எவ்வகையிலும் அனுமதிக்கமுடியாது.
முன்னரும், வடக்கில் பொருத்து வீடுகள் தான் மக்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. அதனையும் தெற்கில் உள்ளவர்கள் தான் முடிவுசெய்தார்கள். அங்கும் மக்களின் விருப்பங்கள் கேட்கப்படவில்லை. பொருத்து வீடுகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டு முதலமைச்சர் தான் எதிர்த்தார்.
ஆகவே மத்திய அரசில் இருப்பவர்கள் எதையும் தமிழ்மக்களிடம் திணிப்பதனை முதலில் கைவிடவேண்டும்.
சிங்கள பேரினவாத அரசு வடக்கின் பொருளாதார மத்திய நிலைய சர்ச்சையில் குளிர்காயவும், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவும் தான் பல்வேறு வகையில் செயற்பட்டார்கள்.
அதன் முக்கிய அம்சம் தான் வவுனியா நகரில் இருந்து 2 கிலோமீட்டருக்குள் அமையவேண்டும் என்பது…
அப்படி அமைந்தால் அதனை தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கவே அவர்கள் விரும்பினார்கள். மத்திய, மாகாண அரசுகளின் அதிகாரப் போட்டியாகவே இதனை அவர்கள் நோக்கினார்கள்.
பெரும்பாலும் தமிழ்பேசும் மக்களும், தமிழ் வர்த்தகர்களும் நிறைந்த வவுனியா நகரப் பகுதியில் தமிழ்மக்களின் ஆதிக்கத்தை குறைத்து அதனை இரண்டாகப் பிரித்து வவுனியா நகர், தாண்டிக்குளம் பொருளாதார மத்திய நிலையம் என வவுனியாவில் இரண்டு மையங்களை உருவாக்கவே அரசு முயற்சித்ததாக சொல்கிறார்கள்.
தாண்டிக்குளத்தில் அமைந்தால் வடக்கின் ஒரேயொரு விவசாய பாடசாலையான வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களின் தமது கற்றல், கற்பித்தல், பயிற்சி ஆய்வு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும் எனவும் விவசாயக் கல்லூரியின் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயத்தை கொண்டுள்ளதாகவும் கூறி நேற்று எதிர்ப்பைக் காட்டி இருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
எல்லாவற்றையும் தாண்டி தமிழ்மக்கள் பாணுடன் பருப்பை சேர்த்து சாப்பிடுவதா? அல்லது சம்பலை சேர்த்து சாப்பிடுவதா என்பதனை அவர்களே முடிவு செய்யவேண்டும். அதனை விடுத்து சம்பலைத் தான் சாப்பிட வேண்டும் என நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது.
வடக்கின் பொருளாதார மத்திய நிலையத்தைக் கூட தமிழர்களால் தீர்மானிக்க முடியாத நிலையில், சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை எவ்வாறு எதிர்பார்ப்பது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.