நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார்.
பிரதி ஊடக அமைச்சின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் தொடாந்தும் ஊடக அறிக்கையில், நாட்டில் தேசிய அனர்த்த நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை புரிந்து கொண்ட இலத்திரனியல் அச்சு மற்றும் சமூக வலையமைப்பு ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி வருகின்றன.
பல்வேறு வழிகளில் பல்வேறு பயனுள்ள தகவல்களை மக்களுக்கு காத்திரமான வகையில் ஊடகங்கள் கொண்டு செல்கின்றன.
ஊடகங்களின் இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியதுடன் நன்றி பாராட்டப்பட வேண்டியதாகும்.
ஊடகங்களின் இந்த முயற்சிக்கு நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனினும், ஒரு சில சமூக வலையமைப்புக்கள் மற்றும் சில ஊடகங்கள் அனர்த்த நிலைமையைக் கூட பிழையான வழிகளில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் துர்ப்பாக்கிய நிலையை காணக்கூடியதாக உள்ளது.
மக்களை ஆத்திரமுட்டும், மக்களை கிளர்ச்சியடைச் செய்யும் வகையில் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றன.
களனி கங்கை மதகுகள் உடைப்பெடுக்கப் போவதாக சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தன.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம் செயலிழந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாது எனவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் போலியான செய்திகளை வெளியிடுவதனை பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் செய்யாது எனவும் அது உசிதமானதல்ல எனவும் கரு பரணவிதாரண தெரிவித்துள்ளார்.