அனுச பெல்பிட்ட நியமனம் குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் உத்தரவு.

246
அனுச பெல்பிட்ட நியமனம் குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் உத்தரவு: குளோபல் தமிழ்செய்தியாளர்:-

அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியொன்று அனுச பெல்பிட்டவிற்கு வழங்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சுதேச விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் பதவிக்கு அனுச பெல்பிட்ட அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சிக் காலத்தில் அனுச பெல்பிட்ட, தொலைதொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் காலத்தில் 600 மில்லியன் ரூபா பெறுமதியான சில் ஆடைகள் விநியோகம் செய்யப்பட்ட பாரிய நிதி மோசடிச் சம்பவத்துடன் அனுசவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே அனுசவிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எவ்வாறு அனுசவிற்கு நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சு ஒன்றின் மேலதிக செயலாளர் பதவி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
உரிய முறையில் பதவி வழங்கப்படாது ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் உடனடியாக அனுசவை பணி நீக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அனுச பெல்பிட்ட நியமிக்கப்பட்டமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என சுதேச விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE