அனுமதியுடனேயே மதுபான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது-உதவி மதுவரி பொறுப்பதிகாரி.

200

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக சகல அனுமதியுடனுமே மதுபான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது உதவி மதுவரி பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையம் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த மதுபான விற்பனை நிலையம் மீள புதுப்பிக்கப்பட்டு கிராம சேவையாளர் உட்பட அனைவரின் அனுமதியுடனும் நகரசபை பொது சுகாதாரப்பரிசோதகரின் பரிசோதனையின் பின்னரே திறந்துவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா உதவி மதுவரி பொறுப்பதிகாரி எஸ். அசோக திலகரட்ன தெரிவித்துள்ளார்.

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையம் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது, வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் கண்டி வீதியில் முதலாம் மாடியில் கடந்த 15 தொடக்கம் 20வருடமாக இயங்கி வந்த மதுபான நிலையம் நிலையம் தற்போது மீள புதுப்பிக்கப்பட்டு புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக முதலாவது மாடிக்கு மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை நிலையத்தினை அப்பகுதியில் அமைப்பதற்குரிய அனைத்து சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வியாபார நிலையத்தின் உரிமையாளரின் சம்மதக்கடிதம்,  வியாபார நிலையத்தின் வரைபடம் வியாபார நிலையத்தின் ஒப்பந்தக்கடிதம், பொலிஸ் நிலையத்தின் கடிதம், நகரசபையின் அனுமதி, பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் அனைத்துக்கடிதங்களும் எமக்கு கிடைத்த பின்னரே நாங்கள் ஒரு குழுவினரை அப்பகுதிக்கு அனுப்பி எமது விசாரணைகளின் பின்னரே எமது அனுமதியை வழங்கிவருகின்றோம்.

எனவே இந்த மதுபான விற்பனை நிலையம் சட்டவிரோதமானதோ அல்லது சட்டத்திற்கு எதிராகவே அனுமதியளிக்கப்படவில்லை. தற்போது சிலரிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. எனவே இதனையும் எமது குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மதுபான நிலையம் அமைப்பதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் எவ்வித சட்டத்திற்குப்புறம்பான நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கவில்லை. இப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியிலிருந்து மது அருந்தினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE