
வன விலங்கு திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் தொடர்பான புத்தகத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறித்த வழக்கு கொழும்பு நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் யானைகளை வைத்திருந்த நபர்களுக்கு எதிராக அந்தந்த நீதிமன்ற வயலங்களில் வழக்குத் தொடரப்படத் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 10ம் திகதி நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவிற்கு அமைய சட்டவிரோதமாக வளர்கப்பட்டு வந்த 40 யானைகளில் 38 யானைகளை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளனர். ஏனைய யானைகளை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு மே மாதம் 18ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் யானைகளை அன்பளிப்பாக வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சிக் காலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மஹிந்த ராஜபக்சவினால் சட்டவிரோதமாக யானைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.