றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்து் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் அனுர சேனாநாயக்க, நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சென்று மேற்கொண்ட விசாரணைகளில் வசிம் தாஜூடீனின் உடல் பகுதிகள் என நம்பப்படும் 19 தொடை பகுதி மாதிரிகள் மற்றும் 7 மார்பு பகுதி மாதிரிகளை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டதாக வழக்கில் ஆஜரான அரச சட்டத்தரணியான சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த உடல் மாதிரிகள் வசிம் தாஜூடீனின் உடல் மாதிரிகளா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர சம்பந்தமாக இலங்கை மருத்துவச் சபை நடத்தும் விசாரணைகளின் மந்தகதி தொடர்பாகவும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
எனினும் தாம் வேண்டும் என்று விசாரணைகளை தாமதிக்கவில்லை என இலங்கை மருத்துவச் சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக ஆராய்ந்து பார்த்து அறிக்கை வெளியிட உள்ளதாகவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.