அனைவருக்கும் மைத்திரி அடித்த நெத்தியடி… !

343

 

உலகின் சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் அடிக்கடி மாறி, மாறி இடம்பெறும் போன்று தெரிகின்றது. அவை சில சமயங்களில் விசித்திரமானதாகவே அமைந்துவிடுவதுண்டு. எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்றவகையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.
20141121-afp-MaithripalaSirisena-800x365-600x365

அந்தவகையில் அரசியலை பொறுத்தவரை உயர் பதவிகளில் இருக்கின்றவர்கள் பதவி இழப்பதும் முன்னர் இருந்ததைவிட குறைந்த பதவிகளுக்கு செல்வதும் தற்போது அடிக்கடி இடம்பெற்றுவருகின்றன.

அதற்கு அண்மைக்கால சிறந்த உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 10 வருடங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்து விட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றமையை குறிப்பிட்டுக்கூற முடியும்.

இதேவேளை தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த கருத்தொருமைவாத தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களில் அமைச்சர் பதவி வகித்த சிலர் இம்முறை தேசிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த சிலர் இம்முறை இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

இந்தவகையில் இவர்களுக்கு இவ்வாறு பதவிகள் குறைந்துள்ளமை தொடர்பில் கவலைகள் இருக்கலாம். சிலர் இந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். “”எனக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைத்திருக்கவேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. அதற்காக நான் கவலைப்படவில்லை. என்னுடைய சேவையை நான் நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்குவேன்”” இது அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைக்காத பிரதியமைச்சுப் பதவியை ஏற்ற ஒருவர் வெளிப்படுத்திய கருத்தாகும்.

எனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. ஆனால் நான் அமைச்சரவை அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதற்கு முழுமையான தகுதியுடன் இருக்கின்றேன். ஆனால் கிடைக்கவில்லை மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றவர் வெளிப்படுத்திய கருத்தே இதுவாகும்.

இவ்வாறு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தும்போது அவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய வலுவான பதில் ஒன்றை வழங்கியுள்ளார்.

கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்து தற்போது பிரதியமைச்சர்களாகவோ இராஜாங்க அமைச்சர்களாகவோ பதவி பெற்றுள்ளவர்கள் கவலையடையவேண்டியதில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் பத்து வருடங்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து விட்டு தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியுமாயின் அமைச்சர்களாக இருந்தவர்கள் இராஜாங்க அமைச்சர்களானால் என்ன தவறு உள்ளது. அவ்வாறு இருக்க ஏன் முடியாது?

இதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைவருக்கும் நெத்தியடியாக வழங்கியுள்ள அறிவுரையாக அமைந்துள்ளது. உண்மையில் மக்களுக்கு சேவையாற்றவேண்டுமாயின் அமைச்சராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதனை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

காரணம் ஆளும் கட்சியில் இருந்தாலே அரசாங்கத்தின் தலைமையை வலியுறுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். அமைச்சுப் பதவி கிடைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்களவு செல்வாக்குடன் செயற்படலாம் என்பது உண்மைதான்.

ஆனால் அதற்காக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்று கூற முடியாது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளில் இருந்துகொண்டு சில மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவையாற்றிய வரலாறும் உள்ளது.
எனவே தற்போது நாட்டில் வழமைக்கு மாறான வித்தியாசமான இரண்டு பிரதான கட்சிகளையும் கொண்ட அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது. எனவே மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும். மக்களை மீண்டும் ஏமாற்றலாம் என்று மக்கள் பிரதிநிதிகள் கருதினால் அது தப்புக்கணக்காகவே அமைந்துவிடும் என்பதனை மறந்துவிடக்கூடாது.

SHARE