நீங்கள் முதலாவது தடவை பாராளுமன்றத்திற்குப் பிரவேசிக்கும் போது நான் சிறுவன். உங்கள் அரசியல் அனுபவத்திற்கும் எனது வயதிற்கும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. ஆயினும் உங்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல இவ்வித்தியாசம் தடையாக இருக்காது என்று நினைக்கிறேன்.
“தம்பி நீர் விசர்க் கதைகள் கதைக்கப்பிடாது” என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதன் பிரகாரம் நாங்கள் சில முன்னெடுப்புகளைச் செய்கிறோம். சர்வதேச நாடுகள் எங்கள் பக்கம் நிற்கிறார்கள். அவர்கள் சில வாக்குறுதிகளை எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். நாங்கள் அதன்படி சில அலுவல்களைச் செய்துகொண்டு இருக்கிறம். 2016 முடிவடைவதற்குள் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். அதனை பெற்றுக் கொடுப்பம். அதை யாரும் குழப்ப முனையக் கூடாது. தம்பி சுமந்திரன் எனக்குப் பல வழிகளிலும் உதவிக்கொண்டு இருக்கிறார். இராஜதந்திர ரீதியாக நான் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் பக்க பலமாக இருக்கிறார்.”
என்றெல்லாம் நீங்கள் சொல்வது எனக்கும் மக்களுக்கும் கேட்கிறது.
சொல்லுறதைக் கேட்கிற ஆட்களையும் மக்களையும் ஊடகவியலாளர்களையும் விரும்பிற தலைவராகத்தான் எல்லோரும் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அக்காலங்கள் கடந்துவிட்டன. தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் நோக்கி மக்கள் கேள்வி கேட்பதும் சரியான பதில் வராவிடில் அவர்களைத் தூக்கி எறிவதுமான காலத்துக்குள் நாங்கள் நுழைந்து விட்டோம்.
முள்ளிவாய்க்காலில் எங்களில் இருந்து பெருக்கெடுத்த ரத்த ஆறு எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போனதால் இப்பொழுது சரியான பலவீனமாக நாங்கள் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தால்… அப்பலவீனத்தைப் பயன்படுத்தி முன்னைய கால. தலைவர்கள் செய்த அரசியலைச் செய்து எங்கள் மீது சவாரிவிடலாமென்று நீங்கள் நினைத்தால்… எனக்கு நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள் என மிக நம்பிக்கை உள்ளது. ஏனெனில் நான் மட்டுமல்ல புதிய இளைஞர் சமூகமும் மிகுந்த விழிப்புடன் இருக்கிறது.
கடந்த 50 வருடங்களாகத் தீர்வு அதுக்கால வருது.. இதுக்கால வருது.. என்று நம்பிய நாங்கள் இன்னும் ஒரு வருடம் நீங்கள் சொன்னபடி பொறுப்பதால் குடிமுழுகப் போவதில்லை( குடி முழுகிறதுக்கு எங்களிடம் ஏதாவது இருந்தால் தானே!). இத்தேர்தலில் வாக்குப் பெட்டிகளை நிரப்பி 16 பேர்களை நாடாளாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறோம். அதனால் இனி உங்களைச் சும்மா கதிரையில் தூங்க விடுகிற நோக்கம் எங்களுக்கு இல்லை. போகிற இடமெல்லாம் “தூங்கும் சம்பந்தர்” “டங்கமாரி சம்பந்தர்” என்றெல்லாம் வரும் விமர்சனங்களுக்கு உங்கள் செயற்பாட்டுகள் மூலமே நீங்கள் பதிலளிக்க முடியும். சம்பந்தர் அவர்களே கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்போம். வயது போன காலத்தில் பொறுமை இழந்து திட்ட மாட்டீர்கள் என்று நினைக்கிறோம். உங்களுக்கான சம்பளம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து வருவது. அறிவீர்கள் அல்லவா?
கூட்டணித் தலைவர் தலைவர் அமிர்தலிங்கத்திற்குப் பிற்பாடு பல வருடங்கள் கழித்து எதிர்கட்சித் தலைவர் பதவி உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அரசியற்தளத்தில் ஒரு நாட்டின் 4ஆவது பெரும் பதவி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கு அடுத்து நீங்கள் வருகிறீர்கள்.
கொழும்பில் எதிர்கட்சித் தலைவருக்கான அலுவலகம்,
எதிர் கட்சித் தலைவர் இருப்பதற்கான வாசஸ்தலம்,
உங்களைச் சுற்றி 30 முதல் 40 வரையிலான பணியாளர்கள்,
வாகன மற்றும் எரிபொருள் வசதிகள் உங்களுக்கு கிடைக்கவுள்ளன.
இலங்கைவரும் தலைவர்கள் அனைவரும் உங்களைச் சந்தித்து செல்லவேண்டிய பாரம்பரியம் உங்களுக்குப் பல சந்தர்பங்களை வழங்கப்போகிறது.
உத்தியோகபூர்வமான வெளிநாட்டுப் பயணங்களுக்கான சாத்தியங்கள் உருவாகப்போகின்றன.
ஆளும் அரசாங்கத்தில் ஊழல் இடம்பெற்றால் அதனை பாராளுமன்றின் கவனத்திற்கு கொண்டு வரும் பொறுப்பு உங்களுக்கு வருகிறது.
நிகழக்கூடிய ஊழல்கள் குறித்து விசாரித்து ஜனாதிபதிக்கும் பாராளுமன்றிற்கும் பிரதமருக்கும் அறிக்கையிடும் அதிகாரம் கூட உங்களுக்கு வரப்போகிறது.
பாராளுமன்ற ஆட்சியில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளில் பிரதமரோ ஜனாதிபதியோ உங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகப்போகிறார்கள்.
இதுவரை காலமும் சர்வதேசத் தலைவர்களினதும் இராஜதந்திரிகளினதும் சந்திப்புக்காக நேரம் கேட்க வேண்டி இருந்த நிலைமை மாறி அவர்கள் உங்களைத் தேடிவந்து சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
சர்வதேச விசாரணையின் அவசியம், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான மக்களில் நிலை, வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உடனடிப்பணிகள், இராணுவப் பிரசன்னம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட/ அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், அரசியற் கைதிகளின் விடுதலை, மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் போன்றவை தொடர்பாக சுதந்திரமாகப் பேசக்கூடிய நிலமைகள் தோன்றியுள்ளன.
உங்களுக்கு கிடைத்த அதிகாரங்களும் சலுகைகளும் லட்சக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் தியாகங்களாற் கிடைக்கப் பெற்றவை; அவை உங்களுடையவை அல்ல; அவை உங்களுக்கு வாக்களித்த மக்களுடையவை. இவற்றை ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் பயன்படக் கூடியதாக எப்படி மாற்றப் போகிறீர்கள்? உங்களுடைய அரசியல் முதிர்ச்சியை மக்கள் கணிப்பதற்கு இது சரியானதொரு சந்தர்ப்பம்.
இன்று உங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள எதிர்க்கட்சித் தலைமைப் பதவி ஒன்றுக்கும் உதவாதது, அதிகாரம் அற்றது, தமிழ் மக்களின் உரிமைப் போரை மழுங்கடிப்பதற்கான வலை, சர்வதேச விசாரணையைத் தோற்கடிப்பதற்கான வியூகம் என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதனை நீங்கள் அறிவீர்கள். இவ்விமர்சனங்களில் நியாயமில்லை என்றும் கூற முடியாது. கடந்த ஆறு தசாப்த கால அனுபவங்கள் இத்தகைய சந்தேகத்தை பலரிடம் ஏற்படுத்துவதனைத் தவறு என்று கூறவும் முடியாது.
இத்தகைய விமர்சனங்களை முறியடிக்க வேண்டிய வரலாற்றுத் தேவை உங்களுக்கு உள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள எதிர் கட்சித் தலைமைப்பதவியினூடாக இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கி முழு இலங்கையும் நடக்கப் பலமான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும். இது உங்களதும் உங்களைச் சுற்றி உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களதும் சுயநலம் கருதாத ஆளுமையிலும் கட்சிகளின் கூட்டுழைப்பிலுமே தங்கியுள்ளது.
இலங்கையின் கோடீஸ்வரத் தமிழ் அரசியல் வாதிகளில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்றோ ஆடம்பரமான களியாட்டங்களில் ஈடுபடவேண்டுமென்றோ உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் மேம்படுத்த வேண்டுமென்றோ ஆசையிருக்காது என்று நம்புகிறேன்.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஆசைகள் தோன்றும் பட்சத்தில் அதனை முளையிலேயே கிள்ளி விடும் துணிவும் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன். சலுகைகளுக்குள் மூழ்கி உரிமைகளை மறக்கவேண்டிய வயதில் நீங்கள் இல்லை. அத்தகைய வயதில் இருப்பவர்களை உங்களுக்கு முடியாமற் போனால் ஊடகவியாளர்களைக் கூட்டி அடையாளம் காட்டி விடுங்கள். மிகுதியை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற ஆட்சி முறைமையில் ஆளும் கட்சிக்கு எதிரான கட்சி ஒரு நிழல் அரசாங்கத்தையே இயக்க முடியும். அதற்குரிய வளங்களை அரசாங்கமே உங்களுக்கு வழங்குகிறது. உங்களுக்குரிய 30ற்கும் மேற்பட்ட பணியாளர்கள், 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய அவர்களின் உதவியாளர்கள் 2 பேர் விகிதம் 32 பணியாளர்கள், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருக்கான 22 பணியாளர்கள் என ஏறத்தாள அரசாங்க ஊதியம் பெறுகின்ற 75 பணியாளர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இயக்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வளங்களையும் அதிகாரத்தையும் கொண்டு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பலமான அரசியல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். புலம்பெயர் மக்களிடம் காணப்படுகின்ற பொருள் மற்றும் அறிவுசார் வளங்களையும் இணைத்துக்கொண்டு சர்வதேச அளவில் பலமான லொபி ஒன்றையும் உருவாக்க முனைய வேண்டும். அதேபோல் உள்நாட்டிலும் அனைத்து அறிவுசார் மட்டங்களில் இருந்தும் ஒரு லொபியை உருவாக்க முனையவேண்டும். இவற்றின் ஊடாகத் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைக்கான தீர்வுக்கான கொள்கையையும் திட்ட வரைபுகளையும் உருவாக்க இதய சுத்தியுடன் வேலை செய்தாற்றான் முடியும்.
உள்நாட்டில் சிறுபான்மைக் கட்சிகளையும் தலைவர்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம், தெற்கில் உள்ள முற்போக்கான கட்சிகளுடன் உறவுகளைப் பலப்படுத்தி இனப்பிரச்சனைக்கான தீர்வில் அவர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகள், என மிக முக்கியமாக மேற்கொள்ளப்படவேண்டிய விடையங்கள் உங்கள் முன்னுள்ளன. சனநாயகச் சிந்தனையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நீங்கள் எடுக்க முனையாவிடால் அடுத்த தேர்தலில் உங்கள் இருப்பு அழிக்கப்பட்டு விடும்.
சரியான வேலைப்பிரிவிகளைத் தோற்றுவித்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கடமைகளையும் அதிகாரங்களையும் ஒப்படைத்து அவர்களை தொடர்சியாக இயக்கி வழிநடத்த வேண்டிய தேவை உள்ளது.
ஜே. ஆர். ஜெயவர்தன காலத்தில் திரு. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுக்கு கிடைத்த எதிர்க்கட்சித்தலைவர் பதவியின் ஊடாக அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. பாராளுமன்றத்தில் வாய் திறக்கக் கூட அவர் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் ஒருவருட காலத்தில் அப்பதவியும் பறிக்கப்பட்டது.
இன்று எதிர் கட்சித் தலைவர் பதவி அளிக்கப்பட்ட அன்றே அமைச்சர்களின் அதிகரிப்புக்கு எதிராக கருத்துச் சொல்லும் சுதந்திரம் உங்களுக்கு காணப்பட்டது என்பதுடன் வாக்களிப்பிலும் கலந்துகொள்வதனை தவிர்க்கவும் முடிந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் ஜனவரி 8 முதல் கிடைக்கப்பெற்றுள்ள இச் சிறியளவிலான ஜனநாயக இடைவெளியை எப்படிப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதனை உள்நாட்டிலும் சர்வ தேசத்திலும் அனைவரும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழர்களோ தமிழ் அமைப்புகளோ ஒரு போதும் ஜனநாயக வழியிற் தீர்வுக்கு இணங்கப் போவதில்லை என்ற மாயையைச் சிங்கள ஆட்சியாளர்கள் சர்வதேச அளவிற் பலமாக உருவாக்கியிருக்கிறார்கள். அதனை முறியடிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தலைமைகளிடம் இருக்கிறது. பேச்சுவார்த்தைகளின் போது தமிழர்களே அதனை குழப்பினார்கள் என்ற கருத்தும் உலக அளவில் உள்ளது. அதனை இல்லாது ஒழிப்பதற்கு தமிழ் தரப்பும் சில அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து சிங்கள இனவாதிகளுக்குத்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விருப்பம் இல்லை என்பதனை நிறுவ வேண்டும். அதற்குத் தற்போதைய சந்தர்ப்பத்தை (அரசாங்கச் செலவிலேயே) பயன்படுத்த முடியும்.
நண்பர் ஒருவர் கேட்டார்: நல்லாட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய அமைச்சர்களை அதிகரிப்பதைக் கூட இவர்களால் தடுக்க முடியவில்லை என்றால் இவர்களால் எதனைத்தான் செய்ய முடியும்? மக்கள் நலனை முன்னிறுத்தாத இவர்களால் எதனையுமே செய்ய முடியாது.
நான் திருப்பிக் கேட்டேன்: சரி கட்சிகளின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரும் குறைந்த பட்ச அமைச்சர்களையாவது இந்த அரசாங்கம் கொடுக்க மறுத்தால், இருக்கும் அடுத்த வழி என்னவெனில் காத்திருக்கும் மகிந்த ஆட்சியமைப்பதாகும். கடந்த தசாப்தங்களாக இனவாதத்திலும் ஊழலிலும் ஊறி இயங்கும் அரச இயந்திரத்தை ஒரு வருடத்துள் தலைகீழாக மாற்ற முடியாது. கிடைத்த சனநாயக இடைவெளியைப் பயன் படுத்தி நுட்பமாக நகர மறுத்தால் மீண்டும் ராஜபக்ஸ யுகம் ஏற்படும். உண்பதற்குக் கூட சிறுபான்மையினர் வாய்திறக்க முடியாத நிலை வரும்.
ஆக நாம் நிலவுகின்ற சூழலை எப்படி எமக்குச் சாதகமாக்கி அடுத்த கட்டத்திற்கு நகரமுனைகிறோம் என்பதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.
30 வருட காலச் சாத்வீகப் போராட்டமும் 30 வருடகால ஆயுதப் போராட்டமும் தந்த அனுபவங்களின் ஒளி எனக்கு இதனையே சொல்கிறது.